×

அருப்புக்கோட்டை நகர பகுதிகளில் காலியிடங்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்: தேங்கும் மழைநீரால் தொற்றுநோய் ஆபத்து

அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை நகர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் குடியிருப்புகள் இடையே உள்ள காலி இடங்களை பலரும் வாங்கி பராமரிப்பு இன்றி விலை ஏற்றத்துக்காக போட்டு வைத்துள்ளனர். இதனால் அந்நிலங்களில் கருவேலமரங்கள் வளர்ந்து காடாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் மழை நீர்பெய்து தொற்று நோய் பரப்பும் கேந்திரமாகவும் மாறி வருகிறது. அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலர் காலியிடங்களை வாங்கி விலையேறும் போது விற்பனை செய்யலாம் என நினைத்து அப்படியே விட்டுவைத்துள்ளனர். அந்த இடங்களில் அவர்கள் எவ்வித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதில்லை.

இதனால் அங்கு சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர்களாக மண்டி கிடைக்கிறது. இதுபோல் உரிய பராமரிப்பின்றி சீமைக்கருவேல காடுகளாக காட்சி அளிக்கும் இடங்கள் நகர் முழுவதும் அதிக அளவில் இருக்கின்றன. இந்த இடங்களை வாங்கியவர்கள் அவற்றில் எவ்வித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் போட்டு வைத்துள்ளனர். இதனால் அங்கு கருவேல மரங்கள் புதர்கள் போல வளர்ந்திருக்கிறது. இதனால் அவை விஷப் பூச்சிகளின் வாழ்விடமாக திகழ்கின்றது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இது போல் விஷப்பூச்சிகளின் உறைவிடங்களாக காலியிடங்கள் மாறியிருப்பது பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குகிறது.

அதுமட்டுமின்றி இதுபோல் கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கும் பகுதிகள் குடிமகன்களுக்கு திறந்த வெளிபாராக மாறி வருகிறது. இதன் காரணமாக சுற்றுப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு குற்றச் செயல்கள் நிகழும் அபாயமும் அதிகமாக உள்ளது. காலி இடங்களை வாங்கிப் போட்டுள்ள உரிமையாளர்களில் பலரும் இப்பகுதியில் வசிக்கவில்லை. இவர்கள் எங்கோ குடியிருந்து வரும் நிலையில் அவர்களின் இடத்தால் ஏற்படும் இடையூறுகளை அருகில் குடியிருப்போர் கூறினாலும் இந்த பிரச்னையில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதுபோன்ற பிரச்னை தொடர்வதால் முறையான பராமரிப்பற்ற அந்த இடங்களில் மழை காலங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது.

இதனால் இங்கு கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகிறது. பன்றிகளும் இந்த தற்காலிக குளங்களில் கும்மாளம் போடுவதோடு குடியிருப்புவாசிகளுக்கு கடும் சுகாதாரக் கேடுகளை உருவாக்குகிறது. இது போன்ற பராமரிப்பற்ற இடங்களால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். பராமரிப்பு இல்லாமல் உள்ள காலியிடங்களை கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மேலும் தங்கள் நிலங்களில் கருவேல மரங்களை அகற்றி அவற்றின் உரிமையாளர்கள் வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்படும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karuvela ,Arapukkota , Oak Trees Occupying Vacant Spaces in Arupkkottai City Areas: Risk of Epidemic Due to Stagnant Rainwater
× RELATED கடலாடி-கோவிலாங்குளம் சாலையில் சீமை...