கொலை, கொள்ளை வழக்கு கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி டிஜிபி ஆய்வு

கோத்தகிரி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக அங்குள்ள பங்களாவில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு டிஜிபி நேரில் ஆய்வு நடத்தினார். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் விசாரணையை துவக்கியுள்ளார். அவர் நேற்று கொடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு வந்தார். அங்கு மதியம் 2.30 மணி அளவில் சென்ற அவர், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். மேலும் அந்த இடங்களை சிபிசிஐடி அதிகாரிகள் புகைப்படமும் எடுத்தனர்.

அந்த இடங்களை எஸ்டேட் மேலாளர் நடராஜன், டிஜிபி ஷகீல் அக்தரிடம் காட்டினார். அவரிடம் டிஜிபி விசாரணை நடத்தினார். பின்னர் மாலை 4.30 மணிக்கு அவர் பங்களாவில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் பங்களா மேலாளர், காசாளர், காவலாளிகள், எஸ்டேட்டில் பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவ்வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள கேரளாவை சேர்ந்த சயான், வாளையார்  மனோஜ், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி உட்பட 10 பேரிடமும்  மீண்டும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories: