×

எடப்பாடி தரப்பு கோரிக்கை நிராகரிப்பு பசும்பொன் தேவர் தங்கக்கவசத்தை டிஆர்ஓவிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: எடப்பாடி தரப்பு கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட் மதுரை கிளை, தேவர் தங்கக்கவசத்தை டிஆர்ஓவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கிய 13 கிலோ தங்கக்கவசம், மதுரை அண்ணா நகர் வங்கியில் உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பினர் தங்கக்கவசத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொருளாளரான எனக்கே தங்கக்கவசத்தை பெறுவதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால், எங்களிடம் தங்கக்கவசத்தை ஒப்படைக்க வங்கி தரப்பில் மறுக்கின்றனர். எனவே, தங்கக்கவசத்தை எடுத்துச் செல்லவும், வங்கிக்கணக்கை அதிமுக சார்பாக பயன்படுத்தும் அதிகாரத்தை வழங்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வீ.பவானி சுப்பராயன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பு மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான வழக்கில், கட்சி நியமனம் தொடர்பாக ஐகோர்ட் எந்த முடிவுக்கும் வர முடியாது. அதை உரிய நீதிமன்றத்தில் தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று உத்தரவில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றமும் பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென்று கூறியுள்ளது. அவர்கள் தரப்பும் அதை ஏற்று பிரமாண பத்திரம் கொடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வே முறையானது. இவர்களது பதவிக்காலம் 2026 வரை உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனவே, அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது. வழக்கம் போல எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடந்த 2017ல் இதேபோல் பிரச்னை ஏற்பட்டபோது, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதைப் போல கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் விஜய் நாராயணன், ‘‘முறைப்படி கூடிய பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை ரத்து செய்தது. பெரும்பான்மை பொதுக்குழுவினரால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கட்சி தொடர்பான அனைத்து வங்கி கணக்குகளையும் தற்போதைய பொருளாளரான மனுதாரரே மேற்ெகாள்கிறார். தங்கக்கவசத்தை பெறும் அதிகாரமும் அவருக்கே உள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘அதிமுகவில் இருதரப்பினருக்கு இடையேயான பிரச்னை தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அது தொடர்பாக இந்த நீதிமன்றம் எந்த முடிவுக்கும் வர முடியாது. இந்த சூழலில் இருதரப்பிடம் யாரிடமாவது கொடுக்க வேண்டும் என்றால் அது தேவையில்லாத சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். அதே நேரம் இந்த விழா பாரம்பரியமாக நடக்கிறது. எனவே, நினைவிட காப்பாளர் முன்னிலையில் மதுரை டிஆர்ஓ கையெழுத்திட்டு தங்கக்கவசத்தை பெற வேண்டும். தேவையான போலீஸ் பாதுகாப்பை மதுரை எஸ்பி வழங்க வேண்டும். அங்கு ராமநாதபுரம் டிஆர்ஓ கவசத்தை பெற்றுக்கொண்டு, திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான கூடுதல் பாதுகாப்பை ராமநாதபுரம் எஸ்பி வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

* மதுரை டிஆர்ஓவிடம் தங்கக்கவசம் ஒப்படைப்பு
மதுரை அண்ணா நகர் வங்கியிலிருந்து முத்துராமலிங்கத்தேவரின் தங்கக்கவசத்தை வாங்குவதற்காக, தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் நேற்று மதியம் மதுரை அண்ணாநகரில் காத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து மதுரை டிஆர்ஓ சக்திவேல் வங்கிக்கு வந்தார். நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள், வங்கியில் கையெழுத்து போட்டபின் அவரும் டிஆர்ஓவும் தங்கக்கவசத்தை பெற்றனர். பின்னர் தங்கக்கவசம் போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ராமநாதபுரம் டிஆர்ஓ காமாட்சி கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Edappadi ,Pasumbon Devar ,TRO: ICourt Madurai , Edappadi side's demand rejected Pasumbon Devar's golden armor should be handed over to TRO: ICourt Madurai Branch orders
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்