×

உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி கொசு உற்பத்தி கட்டுப்படுத்த துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை இல்லை. எனவே, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதிக திறன் கொண்ட மருந்துகளை பயன்படுத்தி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘ உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் கொசு ஒழிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கெடுதல் தராத கொசுக்கள் மற்றும் சுற்றுச்சூழலை காக்கும் கொசுக்களை கண்டறிந்து இதர கொசுக்கள் அழிக்கப்படுகின்றன. குஞ்சுகளாக உற்பத்தியாகும் நிலையிலேயே அவை அழிக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் தற்காலிக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

Tags : World Health Organization ,ICORD , Urgent action to control mosquito production as per World Health Organization guidelines: Govt information at ICORD branch
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...