×

ஜமேசா முபினின் நண்பனான முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை: செல்போன் எண்ணை வைத்து போலீஸ் தேடுகிறது

சென்னை: ஜமேசா முபினின் நண்பனும், கார் வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவருமான நபரைப் பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை உக்கடத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 5 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்படி முபினின் செல்போன் எண்ணை வைத்து அவர் யாரிடம் எல்லாம் பேசியுள்ளார் என்பது குறித்து விசாரித்தபோது போலீசாருக்கு ஒரு ஒரு முக்கிய எண் குறித்த தகவல் கிடைத்தது. இதனால் அந்த எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆனால் அந்த எண்ணின் உரிமையாளர் யார் என்பதை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்களை விட தற்போது தலைமறைவாக உள்ளவருக்கும், முபினுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சதித்திட்டம் குறித்த அனைத்து தகவல்களும் அவருக்குத்தான் தெரியும் என்றும் கூறப்படுகிறது.  இதனால் அந்த மர்ம குற்றவாளியை பிடிக்க போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இவரைப் பிடித்தால் மட்டுமே முபின் மற்றும் வீட்டில் பிடிபட்ட வெடிமருந்து எதற்காக வாங்கப்பட்டது என்ற முழு விபரமும் தெரியவரும். இதனால் அவரை தமிழகம் முழுவதும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், முபின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் சில வாக்கியங்களை வைத்திருந்தார். இந்த வாக்கியங்களை தமிழகத்தில் பல இளைஞர்களும் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, யார் அப்படி வைத்திருப்பது என்று விசாரித்தபோது பல்லாவரத்தில் மெக்கானிக் இம்ரான் என்பவர் வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அவரையும், அவரது நண்பரையும் போலீசார், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். போலீசார் விசாரணைக்கு முன்னதாகவே இம்ரான், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இருந்து டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் பல்லாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Jamesa Mubin , Jamesa Mubin's friend, main accused in police net: Police looking for cell phone number
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது