×

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள கோயில் திருவிழாவை முறைப்படுத்த நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள கோயில் திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மதேவர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிவதால் புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி கோவையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், திருவிழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும் என்றும் அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக பக்தர்களை அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுகிறது.  

விழாவில் பலியிடும் விலங்குகளின் கழிவுகளை அங்கேயே விட்டுவிட்டு செல்வதாலும், பட்டாசுகளை வெடிப்பதாலும், விறகுகளை பயன்படுத்தி சமைப்பதாலும் சரணாலயத்தில் மாசு ஏற்படுகிறது என்றார். அப்போது தமிழக அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, கோவில் விழாவுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். அனைத்து துறைகளின் அனுமதிக்கு பிறகே பக்தர்கள் வனத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Sathyamangalam Tiger Sanctuary ,Tamil Nadu ,High Court , Action to regularize temple festival in Sathyamangalam tiger sanctuary: Tamil Nadu government informs High Court
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...