திருக்குறள் ஓவிய காட்சி கூடத்தின் மூலம் 2021-22ம் ஆண்டுக்கான ஓவிய போட்டி

சென்னை: திருக்குறள் ஓவிய காட்சி கூடத்தின் மூலம் 2021-22ம் ஆண்டுக்கான ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2021-22ம் ஆண்டுக்கான ஓவியப் போட்டி தற்போது உலக தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியக் காட்சி கூடத்தின் வழி நடத்தப்படவுள்ளது. இதற்காக திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த 15 படைப்புகளுக்கு இதற்கென நடத்தப்பெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

படைப்பொன்றுக்கு ரூ. 40,000 பரிசுத் தொகையாக வழங்கப்பெறும். போட்டிக்கான விதிமுறைகள்: ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பில் இருக்க வேண்டும். ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரம் அடிப்படையில் வேண்டும். ஒருவர் ஒரு ஓவியத்தை மட்டுமே அனுப்ப வேண்டும். சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். ஓவியங்கள் வேறெந்த போட்டிகளிலும் பங்குபெற்றதாக இருக்க கூடாது. ஓவியங்கள் 3 அடி X 2 அடி அளவுள்ளதாக இருக்க வேண்டும். தரமான ஓவிய கித்தான் துணியில் தரமான அக்ராலிக் வண்ண கலவையில் தீட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஓவியத்தை மெல்லிய மரச்சட்டத்தில் பொருத்தி அனுப்புதல் வேண்டும். ஓவியங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.11.2022 மாலை 5.30 மணி.

முகவரி: இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை-113. தபால் வழி அனுப்புவோர் கண்டிப்பாக ஓவியம் வரைந்தவர் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: