×

மாணவியை ரயிலில் தள்ளி கொன்ற விவகாரம் கொலையாளி சதீஷுக்கு ஒருநாள் போலீஸ் காவல்: சிபிசிஐடிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி

சென்னை: சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி சதீஷை 1 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சதீஷை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த சத்யா(20), கடந்த 13ம் தேதி மதியம் தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த காதலன் சதீஷ் தன்னை காதலிக்க வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை, கடற்கரை நோக்கி வந்த ரயில் முன்பு தள்ளி கொடூரமாக கொலை செய்தார்.
 
இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சதீஷை அதிரடியாக கைது செய்து வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு, ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மேற்படி கொலை வழக்கில் சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், செய்தி தாள்களுக்கு தகவல் கொடுத்த நபர்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களில் பேட்டி கொடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் இச்சம்பவம் தொடர்பாக, தகவல் சொல்ல விரும்பும் நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் உள்ள சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளியான சதீஷிடம் நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினார். அதைதொடர்ந்து சதீஷை 1 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து புழல் சிறையில் உள்ள சதீஷை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Satish ,Saidapet ,CBCID , One-day police custody for Satish, the killer of the girl who pushed her into the train: Saidapet court allows CBCID
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...