×

ராசிபுரம் அருகே சூர்ப்பனகை கோயிலில் கிராம மக்கள் விரதம்: வெள்ளை சேலையுடன் நாளை பொங்கல் விழா

ராசிபுரம்: தமிழகத்தின் ஒரே சூர்ப்பனகை கோயில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது. இந்த கோயில் திருவிழாவிற்காக கம்பு, கோதுமை மட்டுமே உண்டு, கிராம மக்கள் விரதம் தொடங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூரில் ஆயா கோயில் என்று பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் திருக்கோயில். மூன்று வாயில்கள் கொண்ட கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாயில் திறக்கப்படுகிறது. ‘‘ ராவணனின் சகோதரியான சூர்ப்பனகை தான், அழியா இலங்கையம்மன் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார்.

சீதையைத்தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற சூர்ப்பனகை தடுத்தாள். அனுமன் தன் வாலினால் அவளை கட்டி சுருட்டி வீச, புதர்மண்டிய வனப்பகுதியான இந்தப்பகுதியில் தலை கீழாக வந்து விழுந்தாள். அந்த சூர்ப்பனகையை அழியாஇலங்கை அம்மனாக மக்கள் வழிபடுகின்றனர்,’’ என்பது தலவரலாறு. இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோயில் இது மட்டுமே. கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டுமே இருக்கும்.  
கோயில் தனிக்கட்டிடம் ஒன்றில் அம்மனின் குழந்தைகள் என்று 27 குழந்தைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களை 27 நட்சத்திரங்களாக பக்தர்கள் வழிபடுகின்றனர். தீபாவளிக்கு பிறகு வரும், முதல் வெள்ளிக்கிழமையில் இங்கு திருவிழா நடக்கும். அதற்கான பூச்சாட்டுதல் நேற்று நடந்தது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், உணவு சமைக்கும் வாசமும், தாளிக்கும் போது ஏற்படும் சத்தமும், அம்மனுக்கு அவுசகரியத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக முன்னோர் விரதமுறையை கடைபிடித்தனர். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம். அதன்படி திருவிழாவுக்கு முந்தைய 3 நாட்கள் அனைத்து சமுதாய மக்களும் அரிசி சாதம் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து கோதுமை, ராகி, கம்பு உணவுகளை மட்டுமே உண்டு விரதத்தை நிறைவு செய்தபின், அம்மனுக்கு பொங்கல் வைப்போம். இதில் பெண்கள் அனைவரும் வெள்ளைச்சேலை அணிந்து பொங்கலிடுவது ஆண்டாண்டு காலமாய் தொடர்கிறது என்றனர்.

Tags : Surpanagaya Temple ,Rasipuram ,Pongal Festival ,White Saree , Villagers fast at Surpanagai temple near Rasipuram: Pongal celebration tomorrow with white saree
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்