×

தமிழை சாஸ்திரம், சட்டத்தால் அழிக்க முடியாது: கவிஞர் வைரமுத்து பேச்சு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: தமிழை அதிகாரத்தால், அந்நியர்கள் படையெடுப்பால், மதத்தால், சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது சட்டத்தால் அழிக்க நினைக்கின்றனர். எனினும், தமிழ் மொழியை சாஸ்திரத்தாலோ, சட்டத்தாலோ அழிக்க முடியாது. இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணியில் இனி இடம்பெற முடியாது என்று கூறி இந்தி திணிக்கப்படுகிறது.மாநில மொழிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் பரிந்துரை வெற்று உரை மட்டுமே, அதனை புறம் தள்ள வேண்டியது நமது கடமையாகும்.

தமிழ் மொழிக்காக பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரு மொழி கொள்கையை கட்டிக் காக்கின்றனர். இருமொழி கொள்கைதான் நம்முடைய கொள்கை. ஐ.நா, மன்கிபாத் போன்ற இடங்களில் தமிழை பிரதமர் மோடி மேற்கோள் காட்டுவது மகிழ்ச்சி அளித்தாலும், சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு செலவு செய்யும் ஒன்றிய அரசு தமிழுக்கு குறைவாக செலவு செய்வது ஏன். இந்தி பேசாத மாநிலங்கள் கருத்தை கேட்டு விட்டு ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும். எங்கள் மொழி, நிலத்தை தொடவேண்டாம். மசோதோ பரிந்துரையாகவே இருக்க வேண்டும்.


Tags : Tamil Shastra cannot be destroyed by law: Poet Vairamuthu speech
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...