தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய மக்கள் பெருங்களத்தூர், தாம்பரம், மதுரவாயல், வடபழனி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் பல கிலோ மீட்டருக்கு அணி வகுத்து நின்றது

சென்னை: தீபாவளி விடுமுறைக்கு சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் கார், பஸ், வேன், பைக் போன்ற வாகனங்களில் தென்மாவட்டங்களில் உள்ள அவர்களது சொந்த ஊருக்க சென்றனர். இந்நிலையில், அனைவரும் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட தென் மாவட்டங்களுக்கும், வட மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு ஏராளாமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெளியூரிலிருந்து அரசு பஸ், கார், வேன் வந்தனர்.

இதில் ஆம்னி பஸ்கள் மட்டும் வண்டலூர் பகுதியில் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்பட்டதால் செங்கல்பட்டு, தாம்பரம் சாலை பகுதியில் போக்குவரத்து குறைந்தாலும், சிறப்பு பேருந்துகள் அதிகளவு தாம்பரம் பகுதிக்கு வந்ததால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, வட, மேற்கு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்கள் மூலம் சென்னை நோக்கி வந்தனர். இதனால், பரணூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி, வாலாஜா சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றது. வாகனங்கள் சென்னைக்குள் நுழைய சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல் ஆனது. மேலும் கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி ஆகிய இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் கூறுகையில், வழக்கமாக பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள பொதுமக்கள் தென்மாவட்டங்களில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.

அவ்வாறு செல்லும்போதும் விடுமுறைக்கு பின் சென்னை திரும்பும்போதும் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அனால் நேற்று இதுபோல நடக்காமல் இருக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமைத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் வாகனங்களை எங்கும் நிற்கவிடாமல் தொடர்ந்து நகர்த்திக்கொன்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: