தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் குஜராத்தில் 900 அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம்

புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால், குஜராத்தில் ஒரேநாளில் 900 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிகிறது. எனவவே, வரும் டிசம்பர் மாதத்தில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளது. இந்நிலையில், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட்ட தலைமை தேர்தல் ஆணையம், மாற்றப்பட வேண்டிய அதிகாரிகளின் பட்டியலையும் கொடுத்தது. இவர்களை மாற்றம் செய்து, இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்கும்படி இம்மாநில தலைமை செயலாளர், டிஜிபி.க்கும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 900 அரசு அதிகாரிகள் உடனடியாக நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது, 51 அதிகாரிகள் மட்டுமே பணியிட மாற்றம் பெறாமல் மீதமுள்ளனர். இவர்களில் 6 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர்.

Related Stories: