×

தீவிரவாதிகள் தாக்குவதால் அச்சம் காஷ்மீரில் 10 பண்டிட் குடும்பம் வெளியேறின

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குவதால் 10 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை இந்து பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இங்குள்ள சோபியான் மாவட்டத்தில் வசித்த காஷ்மீர் பண்டிட் புரான் கிருஷ்ணன் பட், கடந்த 15ம் தேதி  தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், கடந்த 18ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் மோனீஷ் குமார், ராம் சாகர் ஆகிய வெளிமாநில கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். உயிருக்கு பயந்து அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர். சவுதரிகண்ட் கிராமத்தில் 35 முதல் 40 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 10 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். இது குறித்து கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பலமுறை கேட்டும், போலீசாரின் சோதனை சாவடி கிராமத்தில் இருந்து வெகுதூரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளின் தொடர் கொலைகள் காரணமாக நாங்கள் அச்சத்துடனே வாழ்கிறோம். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை,’ என்றனர்.

Tags : Pandit ,Kashmir , 10 Pandit families flee Kashmir due to terror attack
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...