இந்திய எல்லைக்கு அப்பால் 1,500 கிமீ.க்கு ஜிபிஎஸ் வசதி: இஸ்ரோ தலைவர் தகவல்

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய கப்பல்கள், விமானங்கள் இந்திய எல்லையில் இருந்து 1500 கிமீ வரை இனி ஜிபிஎஸ் சேவையை பெறும் வகையில் வசதிகள் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நில பகுதிகளை கண்காணிக்கவும், பல்வேறு வகையான போக்குவரத்துக்கு ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தவும், ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ, ஐஆர்என்எஸ்எஸ் 1பி, ஐஆர்என்எஸ்எஸ் 1சி, ஐஆர்என்எஸ்எஸ் 1டி என பெயர் கொண்ட செயற்கைக்கோள்கள் உள்பட 9 செயற்கைகோள்களை இஸ்ரோ ஏவியது. இவற்றில் 2 செயற்கைக்கோள்கள் தோல்வி அடைந்தன. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோமநாத் டெல்லியில் நடந்த இந்திய விண்வெளி சங்க மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மாநாட்டில் அவர் கூறுகையில், ‘இந்திய பகுதிக்கான செயற்கைக்கோள் பயன்பாட்டு எல்லையை (நேவிக்) விரிவாக்கம் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தனியார் துறையினர், கப்பல்கள் மற்றும் விமானங்கள் இதனை பயன்படுத்துவதை அதிகரிக்கும் வகையில், செயற்கைக்கோள்களின் ஜிபிஎஸ் வசதி விரிவுபடுத்தப்படுகிறது. தற்போது நேரம் மற்றும் ஜிபிஎஸ் பயன்பாட்டுக்காக 7 செயற்கைகோள்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதில் பல செயற்கைகோள்கள் அதன் வாழ்நாளை தாண்டி விட்டன. இதனால், விரைவில் 5 புதிய செயற்கைகோள்களை செலுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய எல்லைக்கு அப்பால் 1,500 கிமீ.க்கு இந்திய கப்பல், விமானங்கள் ஜிபிஎஸ் சேவையை பெற முடியும்,’ என தெரிவித்தார்.

Related Stories: