×

சபரிமலையில் பக்தர்களுக்கு வசதிகள் தென் மாநில அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்: நவ. 2ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல, மகர விளக்கு காலங்களில் தான் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2 வருடங்களாக மண்டல காலத்திலும், மகர விளக்கு காலத்திலும் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டு விட்டது. ஆகவே முந்தைய வருடங்களைப் போல இந்த  முறை பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மண்டல, மகரவிளக்கு காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்பட தென் மாநிலங்களில் இருந்து தான் பக்தர்கள் மிக அதிக அளவில் வருகின்றனர். இதனால் தென் மாநில பக்தர்களுக்கு சபரிமலையில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிப்பதற்காக தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராய்  விஜயன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மண்டல, மகர விளக்கு காலங்களில் தென் மாநில பக்தர்களுக்கு சபரிமலையில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.   


Tags : Sabarimala ,Southern ,Ministers ,Thiruvananthapuram , Facilities for Devotees at Sabarimala Southern State Ministers Consultative Meeting: Nov. Happening on 2nd in Thiruvananthapuram
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு