சுல்தான் கோப்பை ஹாக்கி: இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் டிரா

ஜொகோர்: சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை இளைஞர் ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா - ஆஸ்திரேலிய மோதிய லீக் ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிரவில் முடிந்தது. மலேசியாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. அடுத்து தென் ஆப்ரிக்காவிடம் 4-5 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

ஜப்பானுக்கு எதிரான 3வது ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்நிலையில் 4வது ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் தாமி பாபி சிங் அபாரமாக பீல்டு கோல் அடித்து அசத்தினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் 2வது நிமிடத்தில் ஆஸி. வீரர் ஹர்ட் லியம் கோலடித்து பதிலடி தந்தார். தொடர்ந்து  இந்தியாவின் திவாரி, ஆஸி. தரப்பில் ஜாக் 7வது நிமிடத்தில் ஆளுக்கொரு கோல் அடிக்க சமநிலை நீடித்தது. அடுத்து இந்தியாவின் அரெய்ஜித் சிங் 17வது நிமிடத்திலும், ஆஸி.யின் ஜோஷ்வா 19வது நிமிடத்திலும் கோலடிக்க இடைவேளையின்போது இரு அணிகளும் 3-3 என சமநிலை வகித்தன.

2வது பாதியிலும் இந்தியாவின் திவாரி 34வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஆஸி.யின் ஜோஷ்வா 40வது நிமிடத்திலும், ஜாக் 48வது நிமிடத்திலும் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினர். அதனால் ஆஸி. 5-4 என முன்னிலை பெற்றது. இந்தியாவின் தோல்வி ஏறக்குறைய உறுதியான நிலையில், 59வது நிமிடத்தில் அமன்தீப் சிங் அட்டகாசமாக கோலடித்து ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார். கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 5-5 என்ற  கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியா இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 2ல் வெற்றி, தலா ஒரு டிரா, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என்பதால், கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்குகிறது.

Related Stories: