×

பொதுத்துறை, வங்கி அதிகாரிகளை சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்: ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஒன்றிய அரசு துறையில் முக்கியமான பணியிடங்களில் உள்ள அதிகாரிகளை, விதிமுறைப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், வங்கிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணிபுரியும் அதிகாரிகளை குறிப்பிட்ட காலக்கெடுவில் சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஊழலை தடுப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஒன்றிய அரசின் துறைகளில் சில அதிகாரிகள் நீண்டகாலமாக முக்கியமான பதவிகளை தொடர்ந்து வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சுழற்சி இடமாற்றம் தொடர்பான ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலை அரசு துறைகள் பின்பற்றாத செயல்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, ஊழலை தடுக்கும் பொருட்டு, முக்கியமான பதவிகளில் தொடர்ந்து வகிக்கும் அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக தயாரிக்க வேண்டும். 3 ஆண்டு இடைவெளிக்கு ஒருமுறை, முக்கியமான பதவிகளை வகிப்பவர்களை அடையாளம் கண்டு, விதிவிலக்கு இல்லாமல், சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Anti-Corruption Commission , Public sector, bank officials should be transferred on a rotational basis: Anti-Corruption Commission orders
× RELATED ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை...