×

அணு உலை எரிபொருள் கிடங்கை தாக்க திட்டம்: ரஷ்யா மீது உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

கீவ்: ஜப்போரிஜியா அணு உலையில் உள்ள எரி பொருள் சேமிப்பு கிடங்கில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் மிக பெரிய அணு உலையான ஜப்போரிஜியா அணு சக்தி நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. இந்நிலையில், உக்ரைனின் அணுசக்தி நிறுவனமான எனர்கோஅடாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜப்போரிஜியா அணு உலையை சுற்றிலும் ரஷ்ய ராணுவம் ரகசியமாக சில கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த இடத்துக்கு உக்ரைன் அணு சக்தி துறை  பணியாளர்களோ அல்லது  ஐ.நாவின் அணு சக்தி அமைப்பை சேர்ந்தவர்களோ உள்ளே சென்று பார்வையிட ரஷ்ய ராணுவம் அனுமதி மறுக்கிறது. ஜப்போacரிஜியா அணு உலைக்கான எரிபொருள்கள் 174 பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகங்களை  அழித்தால், மிக பெரிய விபத்து ஏற்படும். அணு உலையில் இருந்து நுாற்றுக்கணக்கான சதுர கிமீ தொலைவு இடங்கள் வரை அணு கதிர்வீச்சால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும். எனவே  சர்வதேச அணு சக்தி மையம் அணு உலையில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்’ என்று கூறி உள்ளது.

* அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ரஷ்யா மிக பெரிய தவறை இழைத்து விட்டதாகதான் கருதப்படும் என்று  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு  அதிகாரி கரீன் ஜீன் பியர்  கூறுகையில், ‘‘உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்துள்ளார்.

* மிக மோசமாக தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டம்
ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ``கதிரியக்க ஆயுதங்கள் மூலம் மிக மோசமான தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டு இருப்பதாக ரஷ்யாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. கீவ் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்த இருக்கும் தாக்குதல் பற்றி முடிந்தளவுக்கு உலக நாடுகளுக்கு எடுத்து கூறுவோம்,’’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, உக்ரைனின் கதிரியக்க கழிவு ஆயுதங்கள் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி, இந்தியா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெய் ப்வெங்கியை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். அப்போது, ``தூதரகம், அமைதி பேச்சுவார்த்தையின் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அணு ஆயுதம் அல்லது கதிரியக்க கழிவு ஆயுதம் மனிதகுலத்துக்கு எதிரானது,’’ என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்தார்.

* ரஷ்ய படையின் அணுஆயுத போர் பயிற்சியை அதிபர் புடின் பார்வையிட்டார்.
* பிளசிட்ஸ்க் ஏவுதளத்தில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் `யார்ஸ்’ ஏவுகணைகள், பேரன்ட்ஸ் கடலில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சினிவா ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டன.

Tags : Ukraine ,Russia , Plan to attack nuclear fuel depot: Ukraine accuses Russia of sensationalism
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...