×

காங். தலைவராக கார்கே பதவியேற்பு: பொறுப்பை ஒப்படைத்தார் சோனியா

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நேற்று பொறுப்பேற்றார். அவரிடம் தனது பொறுப்புகளை சோனியா காந்தி ஒப்படைத்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நேரு தொடங்கி ராகுல் வரை பெரும்பாலும் காந்தி குடும்பத்தினரே வகித்து வந்தனர். சீதாராம் கேசரி, நிஜலிங்கப்பா போன்ற தலைவர்கள் குறுகிய காலம் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.

இதையடுத்து, சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். பின்னர், பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் படுதோல்வியை சந்தித்தது. இதனால், பலவீனமாக இருக்கும் காங்கிரசுக்கு முழு நேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஜி23 தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், மாநிலங்களவை  எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே, திருவனந்தபுரம் எம்பி. சசிதரூர் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் கடந்த 19ம் தேதி எண்ணப்பட்டது.

இதில், கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 26ம் தேதி தலைவர் பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில், காங்கிரஸ் புதிய தலைவராக கார்கே பதவியேற்றார். இடைக்கால தலைவரான சோனியா காந்தி, அவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். இதன் மூலம், 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகி இருக்கிறார். இவ்விழாவில் ராகுல், பிரியங்கா மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலந்து கொண்டனர். தலைவர் பதவியை ஏற்ற பிறகு கார்கே ஆற்றிய உரையில், `இக்கட்டான சூழலில் பொறுப்பேற்று இருக்கிறேன். நாட்டில் நிலவி வரும் பொய்கள், வெறுப்புணர்வுகளை பரப்பி வரும் அமைப்பை காங்கிரஸ் தகர்த்து எறியும்.

புதிய இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலையில்லை, விவசாயிகள் ஜீப்பினால் நசுக்கப்படுகின்றனர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி உள்ளன, விலைவாசி கட்டுக்குள் இல்லை. ஆனால், அரசு அதன் முதலாளித்துவ நண்பர்களுக்கு மட்டும் உதவி கொண்டிருக்கிறது. புதிய இந்தியாவில் பட்டினி, கல்வி கட்டணம், மாசு தான் அதிகரித்துள்ளது. அரசு தூங்கி கொண்டிருக்கிறது. தலித், சிறுபான்மையினர் கொள்ளையடிக்கப்படுகின்றனர். அவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றும், காந்தியை துரோகி என்றும் அழைக்கின்றனர். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி சங்கிகளின் அரசியலமைப்பை நிறுவ முயற்சிக்கின்றனர். இது போன்ற புதிய இந்தியாவை உருவாக்கதான், காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என்று கூறுகிறார்கள். இதை காங்கிரஸ் அனுமதிக்காது,’ என்று தெரிவித்தார்.

* சசி தரூருக்கு பதவியில்லை
காங்கிரஸ் புதிய தலைவராக கார்கே பதவியேற்றதும், கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், புதியவர்களை நியமிப்பதற்கு வழிவிடும் வகையில் தங்களின் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து, 47 பேர் கொண்ட காரியக் கமிட்டி உறுப்பினர்களை கார்கே நியமித்தார். அதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூருக்கு இடம் அளிக்கவில்லை.

* நிம்மதியாக உணர்கிறேன் சோனியா காந்தி உருக்கம்
கார்கேவிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு சோனியா காந்தி ஆற்றிய உரையில், `மல்லிகார்ஜூன கார்கேவின் தலைமையில் காங்கிரஸ் உத்வேகம், பலம் பெறும் என்று நம்புகிறேன். காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. முழு பலத்துடனும், ஒற்றுமையாகவும் அனைத்தையும் எதிர்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்று வெற்றி பெறுவோம். தலைவராக என்னால் இயன்றவரை சிறப்பாக செய்தேன். இப்போது, எனது பொறுப்புகளை துறந்து நிம்மதியாக உணர்கிறேன்,’ என்று தெரிவித்தார்.

Tags : Cong. Carke ,Sonia , Kong. Kharge takes over as president: Sonia hands over charge
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்