திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா சிறப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆய்வு.!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (26.10.2022) திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவிற்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா 24.10.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகின்ற 30.10.2022 அன்று சூரசம்ஹாரமும், 31.10.2022 அன்று திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிவதை கருத்தில் கொண்டு திருக்கோயில் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த 21.10.2022 அன்று ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இன்று (26.10.2022)  மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் திருச்செந்தூருக்கு வருகை தந்து  கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள், கழிவறைகள் மற்றும் குளியலறைகள், குடிநீர் வசதி, மருத்துவ மையங்கள், மின்சார வசதி, பாதுகாப்பு வசதிகள், பக்தர்களுக்கான வரிசை முறை,  மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தற்காலிக கூடாரங்களில் தங்கி விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்களிடம் திருக்கோயில் சார்பாக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திரு. இரா.கண்ணன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. லோக பாலாஜி சரவணன், இ.கா.ப., கூடுதல் ஆணையர் திருமதி ந.திருமகள், அறங்காவலர் குழுத் தலைவர் திரு.இரா.அருள்முருகன்  உறுப்பினர்கள், இணை ஆணையர் / செயல் அலுவலர் திரு. ம.அன்புமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: