×

நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு: ஒகேனக்கல்லில் குளிக்க பரிசல் இயக்க அனுமதி

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், 16 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கும் மேல் அதிகரித்தது. அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டியது. இதனால் காவிரியில் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மழை தணிந்துள்ளதால் நீர்வரத்து படிப்படியாக சரியத்தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் அருவிகளில் கொட்டும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, 16 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. நேற்று காலை 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 30 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று காலையும் நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 2,500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

Tags : Okanagan , Water flow drops to 20,000 cubic feet: Permit to operate Parisal for bathing in Okanagan
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி