×

திருப்பதி ஏழுமலையானை 4 மணி நேரத்தில் தரிசிக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 4 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை உள்ளிட்டவை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பி வெளியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி, அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் தீபாவளி நாளில் பக்தர்கள் அதிகளவு சுவாமி தரிசனம் செய்த நிலையில் நேற்று சூரிய கிரகணம் என்பதால் காலை 8 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் இரவு 7.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு தூய்மை செய்த பின்னர் 8.30 மணியளவில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவு வரை 25,549 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தனர். 9,764 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati Seven Mountain Elephant , Devotees visit Tirupati Seven Mountain Elephant in 4 hours
× RELATED தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து...