உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவியப் போட்டி: ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40,000 பரிசு.. படைப்புகளை அனுப்ப அக்.30 கடைசி நாள்..!!

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தின் வழி 2021-22ம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படவுள்ளது. வாழ்வியல் நூலாக உலக மக்களால் போற்றப்படும் உலகப்பொதுமறையாம் திருக்குறளை அனைத்துத் தரப்பு மக்களும் உணர்வதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியோடு திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. இக்காட்சிக்கூடத்தில் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓர் ஓவியம் வீதம் மொத்தம் 133 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் திருக்குறள் தொடர்பான ஓலைச் சுவடிகள், அரிய நூல்கள், சிலைகள், நிழற்படங்கள் மற்றும் சென்ற ஆண்டுகளில் ஓவியப்போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுப்பெற்ற 30 ஓவியங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 2021-22ம் ஆண்டுக்கான ஓவியப் போட்டி தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தின் வழி நடத்தப்படவுள்ளது.

இதற்காக திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதிலுமுள்ள படைப்பாளர்களிடமிருந்து பெற்று நடுவர் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த 15 படைப்புகளுக்கு இதற்கென நடத்தப்பெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. படைப்பொன்றுக்கு ரூ. 40,000/- பரிசுத் தொகையாக வழங்கப்பெறும்.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:

* ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பில் இருத்தல் வேண்டும்.

* ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுதல் வேண்டும்.

* படைப்பு எந்த குறள்/அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தனித்தாளில் படைப்பாளரின் பெயர், முகவரி, தொடர்பு எண் (கட்செவி வசதியுடையது) மற்றும் ஆதார் அடையாள அட்டை (நகல்) ஆகியவற்றை ஓவியத்துடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும். படைப்பாளர்களுக்கு ஒப்புகை இரசீது அனுப்புவதற்கு கட்செவி (Whats App) எண்ணை கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

* ஒரு படைப்பாளர் ஒரு ஓவியத்தை மட்டுமே அனுப்புதல் வேண்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் அனுப்பப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படும்.

* ஓவியங்கள் சொந்தப் படைப்புகளாக இருத்தல் வேண்டும்.

* ஓவியங்கள் அச்சு ஊடகங்கள், இணைய தளங்கள் மற்றும் வேறெந்த போட்டிகளிலும் பங்குபெற்றதாக இருத்தல் கூடாது.

* ஓவியங்கள் 3 அடி x 2 அடி அளவுள்ளதாக இருத்தல் வேண்டும்.

* ஓவியங்கள் தரமான ஓவிய கித்தான் துணியில் (Canvas Cloth) தரமான அக்ராலிக் (Acrylic Paint) வண்ணக் கலவையில் தீட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

* தீட்டப்பட்ட ஓவியங்கள் மெல்லிய மரச்சட்டத்தில் பொருத்தி அனுப்புதல் வேண்டும்.

* போட்டியில் பங்கேற்கவுள்ள ஓவியங்களை நிறுவனத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.11.2022 மாலை 5.30 மணி. [ முகவரி: இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113.] தபால் வழி அனுப்புவோர் கண்டிப்பாக ஓவியம் வரைந்தவர் பெயர் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.

* கடந்த ஆண்டுகளில் நிறுவனத்தால் நடத்தப்பெற்ற ஓவியப் போட்டிகளில் பங்குப்பெற்று வெற்றி பெற்றவர்கள், இப்போது நடத்தப்பெறும் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

* நடுவர்களின் முடிவே இறுதியானது.

* தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கான பரிசுகள் நிறுவனத்தால் 23.12.2022 அன்று நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும்.

* வெற்றி பெற்றவர்கள் பரிசளிப்பு விழாவிற்கு வருகைதர பயணப்படி, நாட்படி போன்றவை வழங்கப்படமாட்டாது.

* போட்டியில் தேர்ந்தெடுக்கப்படாத ஓவியங்களை திரும்பப்பெற விரும்பும் படைப்பாளர்கள் 31.12.2022க்குள் நிறுவனத்தில் ஒப்புகை இரசீதினை சமர்ப்பித்து நேரில் பெற்றுக் கொள்ளலாம். ஓவியங்கள் நிறுவனத்தால் தபாலில் அனுப்பப்பட மாட்டாது.

* குறிப்பிடப்பட்ட நாளுக்குப் பின்னரோ (அ) ஒப்புகை இரசீது இன்றி வருபவர்களுக்கோ எக்காரணத்தைக் கொண்டும் ஓவியங்கள் திரும்ப வழங்கப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113, தொலைபேசி - 044-22542992, வலைத்தளம் - www.ulakaththamizh.in-இல் தொடர்புக் கொள்ளலாம்.

Related Stories: