×

இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் தாய்மொழியை நேசித்தால் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க முடியும்-ஊட்டியில் வனத்துறை அமைச்சர் பேச்சு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய படுகர் சமுதாய மக்களின் தாய்மொழியாக படுகு மொழி உள்ளது. நீலகிரியில் அனைத்து தரப்பினராலும் பரவலாக பேசப்படும் இந்த மொழி தற்போதைய சூழலில் கட்டாயமாக அழியும் நிலையில் உள்ளதாக யுனஸ்கோ தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மொழியை பாதுகாக்கும் நோக்கில் படுகு மொழி சொற்களின் அர்த்தங்களை நெலிகொலு அறக்கட்டளை சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மாத்தெரசி என்ற பெயரில் மும்மொழி அகராதி தயாரிக்கப்பட்டது.

இதனை அண்மையில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் இந்த அகராதியின் அறிமுக விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. நெலிகொலு அறக்கட்டளை தலைவர் தருமன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவன் படுகு மொழியை மேம்படுத்துவது குறித்து பேசினார். அகராதியை தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் அறிமுகப்படுத்தினார்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அகராதியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களில் அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் படித்தால் போதுமானது. இந்தி மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டால், இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். பிற மொழி பேசுபவர்களுக்கு பாதமாக இருக்கும். விருப்பமிருந்தால் அனைத்து மொழிகளையும் கற்கலாம். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழகத்தில் இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம்.

 தாய்மொழியை நேசித்தால் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க முடியும். தற்போது வெளியிடப்பட்டுள்ள படுகு மொழி அகராதியில் 15 ஆயிரம் வார்த்தைகள் அடங்கியுள்ளன. யுனஸ்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுக மக்களை மண்ணின் மைந்தர்களாக அறிவித்துள்ளது. கலாசார பண்பாட்டை பாதுகாக்க வேண்டும். படுகர் சமுதாய மக்கள் தங்களது வீடுகளில் கட்டாயம் தாய்மொழியான படுகு மொழியை பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாநில தலைமை அக்கவுண்டன்ட் ஜெனரல் அம்பலவாணன், நான்கு பெட்டா தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Minister of Forests ,Oodi , Ooty: The Padukhar language is the mother tongue of the Padukhar community, who make up the majority of the Nilgiri district. All in the Nilgiris
× RELATED முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா?...