×

ஏரல் ஆற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு-அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஏரல் : சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளின் ஆக்கிரமிப்பால், ஏரல் தாமிரபரணி ஆறு மாசுபட்டு வருவதை தடுக்க மாவட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆறு, தற்போது சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. குறிப்பாக ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் முற்றிலும் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகளவு உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் ஏரலில் இருந்து பழையகாயல் கடலில் ஆற்றுத்தண்ணீர் சேரும் இடம் வரை சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து வரும்போது சீமை கருவேல மரங்கள் தண்ணீரை செல்ல விடாமல் தடுப்பதால் கரை ஓரப்பகுதியில் உடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் மங்கலகுறிச்சி, வாழவல்லான் பகுதியில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர்  எடுக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் மற்றும் தூத்துக்குடியில் ஒரு பகுதி மக்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஏரல், மங்கலகுறிச்சி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலம் சாயர்புரம் கூட்டுக்குடிநீர் திட்டம், பெருங்குளம், ஏரல் பேரூராட்சி பகுதி மற்றும் சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், நட்டாத்தி, திருப்பணிசெட்டிக்குளம் உட்பட பஞ்சாயத்து பகுதிகளுக்கும் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த உறைகிணறு அமைந்துள்ள பகுதிகளிலும் முட்செடிகள் ஆக்கிரமித்து குடிநீரும் மாசுபட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஏரல் பகுதி தாமிரபரணி ஆற்றை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: ‘ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் ஆற்றங்கரை ஓரப்பகுதியில் பிரசித்திப் பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் இருப்பதால் ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை திருவிழாக்களி பக்தர்கள் ஆற்றில் தங்குவதற்காக கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் தாமிரபரணி ஆற்றில் ஒரு சிறிய முட்செடிகள்கூட வளர்ந்து விடாமல் இருப்பதற்காக வேலை ஆட்கள் மூலம் அகற்றுவதால் ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் மட்டும் முட்செடிகள் வளராமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் மட்டும் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மாலை நேரம் ஆற்று மணலில் அமர்ந்து செல்கின்றனர்.

இதேபோல் ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு கீழ்புறம் உள்ள பகுதியிலும் முட்செடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. அதன் பிறகு ஆற்றுப்பாலத்திற்கு கீழ்புறம் தாமிபரணி ஆறு பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளித்தது. இந்த இடத்திலும் சிறுவர்கள் விளையாடி வந்தனர். நாளடைவில் மீண்டும் இந்த இடத்தில் முள்செடிகள் ஆக்கிரமித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், முட்செடிகளின் ஆக்கிரமிப்பை முழுவதுமாக அகற்றி தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.


Tags : Aral River , Eral: District action to prevent pollution of Eral Thamiraparani river due to encroachment of oak trees and brambles.
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...