கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 3,204 கிராம பஞ்சாயத்துகளில் இந்த ஆண்டு செயல்படுத்த திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்படி 2022-23ம் ஆண்டு 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். இதுகுறித்து வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2021-22ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒவ்வோர் ஆண்டும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஒருங்கே செயல்படுத்துவதற்கு வேளாண்மை-உழவர் நலத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2021-22ம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர், முன்னோடி விவசாயிகள் மற்றும் இதரத்துறை அலுவலர்களை கலந்தாலோசித்து, பஞ்சாயத்தின் கீழ் உள்ள சிற்றூர் உட்பட அனைத்து பகுதிகளையும் கூர்ந்து ஆய்வு செய்து, தொகுப்பாக 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்களை சர்வே எண் வாரியாக கண்டறியப்படுகிறது. ஒரு கிராமப் பஞ்சாயத்தில் மிக அதிகமாக தரிசு நிலங்கள் இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் அமைக்கலாம். 10 ஏக்கருக்குக் குறைவாக தரிசு நிலங்களை தனியாக கணக்கெடுத்து, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராம அளவில் இந்த திட்ட பணிகளை இதர துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும்  ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த கிராம பஞ்சாயத்து பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். 2022-23ம் ஆண்டில் இந்த திட்டம் 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து, கொள்ளலாம். ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, கிராமங்களில் தன்னிறைவு எனும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: