×

அதிக ஈரத்தன்மையால் காற்று மாசு அதிகரிப்பு: மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், மாசு கட்டுப்பாடு குழுமங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக அதாவது 14 நாட்களுக்கு (தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டு தாக்கத்தை கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும் ஒலி மாசு அளவையும் சென்னை மாநகரத்தின் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் மேற்கொண்டது.

ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் (அதாவது) 18ம்தேதி மற்றும் தீபாவளி பண்டிகையன்று 24ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 18ம்தேதி குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 54.84 டிபி (ஏ)வும், அதிக அளவாக ஒலி மாசு வளசரவாக்கத்தில் 65.5 டிபி(ஏ)வும் கண்டறியப்பட்டது. மேலும் தீபாவளி அன்று குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 66டிபி(ஏ)வும், அதிகபட்ச அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 79.7டிபி(ஏ)வும் கண்டறியப்பட்டது. இந்த ஒலி மாசு அளவுகள் தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலிமாசுபாட்டின் அளவுகளை விட அதிக அளவாக உள்ளது என கண்டறியப்பட்டது. (பகல் நேரங்களில் 65.0டிபி(ஏ)வும், இரவு நேரங்களில் 55.0டிபி(ஏ)வும் ஆக இருந்தது.

அதேபோன்று, தீபாவளி அன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் 25ம்தேதி காலை 6 மணி வரை, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 345 லிருந்து 786 வரை (மிக மோசமான அளவுகள்) என கண்டறியப்பட்டது (குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (345) அதிக அளவாக சவுகார்பேட்டையிலும் (786) கண்டறியப்பட்டது). இதற்கு முக்கிய காரணிகளாக, பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளை வெடித்தும் வாண வெடிகளை பெரும் அளவுகளில் வெடித்ததினாலும், காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக் குறைந்த வேகமும் ஆகும். இதுவே, சென்னை மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2022ம் ஆண்டின் தீபாவளி அன்று அதிகமானதற்கு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Pollution Control Board , Increased air pollution due to high humidity: Pollution Control Board information
× RELATED ஈஷா யோகா மையத்திலிருந்து...