×

முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

சென்னை: சென்னை கந்தகோட்டம், வடபழனி, திருத்தணி, திருப்போரூர், காஞ்சி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் முருகன் கோயில்களில் 6 நாட்கள் விரதமிருந்து 7வது நாள் விரதத்தை முடிப்பார்கள். இன்று காலை சென்னையில் கந்தகோட்டம், வடபழனி உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து முருகன் கோயில்களிலும் யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. இக்கோயிலில், கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வரும் 31ம் தேதி வரை மூலவர் முருகப்பெருமானுக்கு புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்க கசவம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து வரும் 30ம் தேதி மாலையில் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 31ம் தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

இறுதி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். திருத்தணி கோயிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் மாலை இருவேலைகளில் தேவாரபாராயணம் நடைபெறும். அப்போது பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மலைக் கோயிலுக்கு சென்று வில்வ இலையால் லட்சார்ச்சனை செய்வார்கள். ஸ்ரீதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோயில் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நேற்று சூரிய கிரகணத்தை ஒட்டி பகல் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 8.30 மணிக்கு திறக்கப்பட்டு. இரவு 9 மணியளவில் கிளி வாகனத்தில் வீதி உலா நடந்தது. சூரசம்ஹாரம் வருகிற 30ம்தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுப்பிரமணி சாமி கோயிலில் (குமரக்கோட்டம்) நேற்று காலை 6 மணி 7.30 மணிக்குள் துலா லக்னத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடந்தன. 30ம் தேதி சூரசம்ஹாரம், நவம்பர் 1ல் முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறும்.

Tags : Gandashashti festival ,Murugan , Gandashashti festival started in Murugan temples
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து