×

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் மோதல்: 10 பேருக்கு சரமாரி வெட்டு; போலீஸ் பற்றாக்குறை காரணமா?

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பல்வேறு இடங்களில் நடந்த மோதல்களில் 10 பேருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது மது அருந்திவிட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், வெட்டிக் கொள்வதும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் நடைபெறும் சகஜமான சம்பவங்களில் ஒன்று. அந்த வகையில், சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் தீபாவளி பண்டிகையின்போது 15க்கும் மேற்பட்ட வெட்டு குத்து சம்பவங்கள் நடந்தன. சென்ற ஆண்டு ஓரளவு குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தீபாவளி பண்டிகை மற்றும் அதன் முந்தைய நாள் ஆகிய 2 தினங்களில் 10 வெட்டு குத்து சம்பவங்கள் நடந்தள்ளன.

போலீசார் எவ்வளவு தான் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், தீபாவளி என்றாலே புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வெட்டு, குத்து சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறையும் ஒரு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை ஆட்பற்றாக்குறையை போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக போலீசாரே குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த வகையில், புளியந்தோப்பு காவல் சரகத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த மோதல்கள் வருமாறு:
* பெரவள்ளூர் கேசி கார்டன் 3வது தெருவை சேர்ந்தவர் தினேஷ் (21), மஞ்சம்பாக்கத்தில் லாரி ஷெட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று  முன்தினம் இரவு 10 மணியளவில் திருவிக நகர் 22வது தெரு வழியாக வந்தபோது, போதையில் வந்த 3 இளைஞர்கள் தினேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவரை கீழே தள்ளி அருகில் இருந்த இரும்பு கம்பியால் அடித்ததில் தினேஷிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

*  திருவள்ளூர் அருமந்தை கூட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (54), பேக் தைக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரம்பூர் சுப்பிரமணிய தோட்டத்தில் உள்ள தனது அக்காவை பார்த்துவிட்டு மூலக்கடை நெடுஞ்சாலை வழியாக நடந்து வந்தபோது, போதையில் வந்த நபர் கத்தியால் அப்துல் ரகுமானை வெட்டினார். இதில் அவருக்கு வலது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது, அக்கம் பக்கத்தினர் அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு  அப்துல் ரகுமான் சிகிச்சை பெற்று வருகிறார்.  திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 82வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (20), இவர் மீது எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் கூட்செட் சந்திப்பில் வந்தபோது போதையில் வந்த 3 பேர் பிரவீன் குமாரை கத்தியால் வெட்டினர். பலத்த காயம்  அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரவீன்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* எருக்கஞ்சேரி கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (32), இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் வரதராஜன் (35). இருவரும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்தனர். அப்போது இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது நடராஜன் வரதராஜனின் மனைவி அஸ்வினியை (29) கத்தியால் வெட்டினார். இதில் அவருக்கு முகத்திலும், தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பதிலுக்கு அஸ்வினின் கணவர் வரதராஜன் நடராஜன், தடுக்க வந்த அவரது மனைவி விஜயா என்பவரையும் வெட்டினார். அவர்கள் காயம் அடைந்தனர். அஸ்வினி, வரதராஜன், விஜயா ஆகிய 3 பேலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* வியாசர்பாடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் ராஜேஷ் (22), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் நண்பரை பார்க்க சென்றார். அப்போது, புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி (22), தாஸ் (21), நரசிம்மா (23) ஆகிய 3 பேரும் குடிபோதையில் ராஜேஷிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டினர்.  அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

* வியாசர்பாடி பி. கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (29), பெயின்டர். நேற்று முன்தினம் இரவு எம்கேபி நகர் 64வது பிளாக் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது போதையில் வந்த 5 பேர் கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ குமாரை அக்கம்பாக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எம்கேபி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

* புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (22). பெரிய மேட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்கிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் வெளியே நின்றபோது, இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்த 2 பேர் சரவணகுமாரிடம், தகராறு செய்து கற்களால் தாக்கியதில் முகத்தில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* ராயப்பேட்டை அங்கமுத்து நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (24), ஞாயிற்றுக்கிழமை இரவு கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கைலாசம் தெருவில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது அவரது மகன் கார்த்திக் கத்தியால் பாலாஜியை  வெட்டினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* வியாசர்பாடி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பாளையம் (60). இவர், ஞாயிற்றுக்கிழமை வியாசர்பாடி 37வது பிளாக்கில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த 3 பேர்  பாளையத்திடம் தகராறு செய்து இரும்புராடை எடுத்து தாக்கியதில் பாளையத்தின் வலது பக்க கண்ணம் மற்றும் இடது பக்க முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் பாளையத்தின் மகன் ரஞ்சித் குமார் தந்தையை தாக்கிய வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாலாஜி (30)  என்பவரிடம் கேட்டபோது, ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் பாலாஜியின் முகம் மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில்  வெட்டியுள்ளார். இதில் பாலாஜி பலத்த காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

* பீட்சா டெலிவரி ஊழியரிடம் செல்போன் பறிப்பு
சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (20). மதுரவாயல் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக தனியார் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் வியாசர்பாடி முல்லை நகருக்கு பீட்சா மற்றும் பர்கர் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடி அசோக் பில்லர் அருகே வந்தபோது 2 பேர் வாகனத்தை மடக்கி கத்தியால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஆயிரம் ரூபாய் மற்றும் பீட்சா பர்கர் உள்ளிட்டவற்றை பறித்துச்சென்று விட்டனர். புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Diwali ,Tamarindo police district , Diwali celebrations flare up again in Tamarindo police district: 10 killed; Is it because of the lack of police?
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...