×

பெரவள்ளூர், திரு.வி.க நகர், தாம்பரத்தில் தீபாவளி பட்டாசு விழுந்து 9 குடிசைகள் எரிந்து சாம்பல்: 5 குடும்பங்களுக்கு அமைச்சர் சேகர்பாபு நிவாரணம் வழங்கினார்

பெரம்பூர்: பெரவள்ளூர், திரு.வி.க. நகர் மற்றும் தாம்பரத்தில் பட்டாசு விழுந்ததில் 9 குடிசைகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதிஉதவி மற்றும் தேவையான பொருட்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் வழங்கி ஆறுதல் கூறினார். சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 27வது தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவரது வீட்டின் மேல் பகுதியில் குடிசைகள் அமைத்து 3 பேர் வாடகைக்கு இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் ராக்கெட் பட்டாசு அந்த குடிசைகள் மீது விழுந்து தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே ஓடி வந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

செம்பியம் தீயணைப்பு துறை அதிகாரி பிரகாஷ் தலைமையில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் குடிசைகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தீ விபத்து சம்பவத்தில் 5 குடிசைகளும் முழுவதுமாக எரிந்ததில் அந்த வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும், வீட்டில் குடியிருந்த முருகன் (43), வெங்கடேசன் (35), ஆதி கேசவன் (63) உள்ளிட்ட 5 குடும்பங்களையும் மீட்ட அதிகாரிகள் அவர்களை அருகில் உள்ள மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில் தங்க வைத்தனர். தீ விபத்து பற்றி தகவ ல்அறிந்ததும் நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 5 குடும்பங்களும் நிதி உதவி மற்றும் தேவையான பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், செய்வதாக உறுதி அளித்தார். அப்போது, கொளத்தூர் பகுதி திமுக செயலாளர்கள் நாகராஜன், ஐசிஎப் முரளி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். ஸ்ரீ திருவிக நகர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஏகவள்ளி (55), இவரது வீட்டில் தாந்தோணி (36), சுகந்தம்மா (60) ஆகிய இருவர் அருகருகே சிறிய குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு வெடித்ததில் இரவு 12 மணி அளவில் ராக்கெட் பட்டாசு குடிசை மீது விழுந்து திடீரென்று குடிசைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால், வீட்டினுள் இருந்தவர்கள் உடனடியாக வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் செம்பியம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். செம்பியம் நிலைய அதிகாரி பிரகாஷ் தலைமையில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய குடிசைகள் என்பதால் 3 குடிசைகளும் உடனடியாக தீயில் கருகி முழுவதுமாக எரிந்தன. இதில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்ற போதிலும், வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்: மேற்கு தாம்பரம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மேனகா (60). இவர், நேற்று முன்தினம் மகனுடன் வெளியே சென்றிருந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு தீப்பொறி மேனகாவின் குடிசை வீடு மீது விழுந்ததில் வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க போராடினர். அந்த சமயம் அவ்வழியாக வந்த தீயணைப்பு வாகனத்தினர் குடிசை எரிவதை கண்டு உடனடியாக தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 3 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை தனபால் நகரை சேர்ந்தவர் கோமளா (32). இவர் வசித்து வரும் வீட்டின் மாடியில் கூரை வீடு உள்ளது. நேற்று முன்தினம் வெடித்த ராக்கெட் பட்டாசு கூரையில் பட்டு தீப்பற்றியது. இதில், கோமளா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில், வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த கட்டில் பீரோ, துணி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* பிளாஸ்டிக் குடோன் எரிந்து சாம்பல்
புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (50). இவர் வீட்டில் பிளாஸ்டிக் குடோன் வைத்து, பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டாசு வெடிக்கும்போது ராக்கெட் பட்டாசு குடோன் மீது விழுந்து தீ பரவியது உடனடியாக, அக்கம் பக்கத்தினர் வியாசர்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வியாசர்பாடி நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது, அப்போது பிளாஸ்டிக்  குடோன் அருகே முருகானந்தம் (63) என்பவரது 2வது மாடியிலும் லேசாக தீ பரவியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து 2 வீடுகளிலும் தீயை அணைத்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில், பிளாஸ்டிக் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசமாயின. இதுதொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Diwali ,Peravallur ,VK Nagar ,Tambaram ,Minister ,Shekharbabu , 9 huts burnt to ashes after Diwali firecracker fell in Peravallur, T.V.K Nagar, Tambaram: Minister Shekharbabu provided relief to 5 families
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...