செட்டில்மென்ட் பிரிவு அதிகாரத்தை ஆர்டிஓவுக்கு வழங்கிய அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு

மதுரை: செட்டில்மென்ட் பிரிவு அதிகாரத்தை ஆர்டிஓவுக்கு வழங்கிய அரசாணையை எதிர்த்த வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் சவுந்தரராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையின் கீழ் சிறப்பு பிரிவாக 78 உதவி செட்டில்மென்ட் அலுவலகங்கள் உள்ளன. இதில், ஒரு தாசில்தார், இரு சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள், இரு சர்வேயர்கள், ஒரு வரைவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 9 பேர் இப்பிரிவில் உள்ளனர். இதில், 14 யூனிட் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 6 யூனிட் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 58 யூனிட் மட்டுமே செயல்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள சர்வே எண்கள் கணக்கிடப்பட்டு, பட்டா நிலம், அரசு புறம்போக்கு நிலங்கள் வகைப்படுத்தல் மற்றும் பட்டா வழங்கப்பட்ட நிலங்களை சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளை இந்த யூனிட் மேற்கொள்ளும். இதன்படி, 50 சதவீத பணிகளை இந்த யூனிட் முடித்துள்ளது. உதவி செட்டில்மென்ட் அலுவலரின் உத்தரவை எதிர்த்து செட்டில்மென்ட் அலுவலரிடம் அப்பீலும், நில அளவை இயக்குநரிடம் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யலாம். இந்நிலையில் செட்டில்மென்ட் பிரிவுக்குள்ள அதிகாரத்தை, வருவாய் கோட்டாட்சியருக்கும், சீராய்வு அதிகாரத்தை நில நிர்வாக ஆணையருக்கும் வழங்கி வருவாய்த்துறை சார்பில் கடந்த ஜூலை 13ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வருவாய் கோட்டாட்சியருக்கு பலவிதமான பணிகள் உள்ளன. இதனால், செட்டில்மென்ட் முறையாக நடந்து வரும் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரத்தை மாற்றி வழங்கிய அரசாணைக்கு தடை விதித்தும், பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: