×

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்த விசாரணை அறிக்கை இன்று வெளியாகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தொடர்பான விசாரணை அறிக்கை இன்று பத்திரிகைகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்தபோது தீ காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த ஆண்டுகளில் தீபாவளிக்கு  தீ காயம் ஏற்பட்டால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தலா 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்தவகையில் மாவட்ட மருத்துவமனைகளில் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தீபாவளி முடிவடைந்துள்ள சூழலில் தமிழகம் முழுவதும் 180 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் 2 மடங்கு மற்றும் 2.5 மடங்கு அதிகமான பாதிப்புகள் இருந்துள்ளன.

இந்த ஆண்டு விபத்து குறைவாக உள்ளது.  சென்னையில் அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 17 சதவீத தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள், ஸ்டான்லி மருத்துவமனையில் 11 பேர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவருக்கு கண் பாதிக்கும் நிலை உள்ளது.  ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த இருவருக்கு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று பத்திரிகைகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


Tags : Nayanthara-Vignesh Sivan ,Minister ,M. Subramanian , Investigation report on Nayanthara-Vignesh Sivan in surrogacy case to be released today: Minister M.Subramanian Information
× RELATED இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக...