சபரிமலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர்  சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலையில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு  பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருநாள் மன்னரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதலே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்படும். மறுநாள் (17 ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. 41 நாள் நீளும் மண்டல காலம் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. 2 வருடங்களுக்குப் பிறகு எந்தவித கொரோனா கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்த வருடம் மண்டல கால பூஜைகள் நடைபெறுவதால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: