×

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கு ‘உபா’ சட்டத்தில் 5 பேர் கைது: 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை; கமிஷனர் பாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலியான வழக்கில் 5 பேரை போலீசார் ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் அந்த வழியாக வந்த மாருதி 800 காரில் காஸ் சிலிண்டர் வெடித்தது. காரில் வந்த பழைய துணி வியாபாரியான ஜமேசா முபின் (25) தீயில் கருகி பலியானார். அங்கு இரும்பு ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இது சதிவேலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பலியான ஜமேசா முபினிடம் 2019ல் என்ஐஏ விசாரணை நடத்தியதும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது. ஜமேசா முபின் வீட்டில் நடந்த சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணி அளவில் ஜமேசா முபின் மற்றும் 5 பேர் மூட்டை ஒன்றை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த நபர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 5 பேரையும் பிடித்தனர்.

அவர்கள் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முகமது தல்கா, தடை செய்யப்பட்ட அல் உம்மா அமைப்பின் இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாப் கானின் மகன் ஆவார். இவர், ஜமேசா முபினுக்கு கார் கொடுத்த விவகாரத்தில் தொடர்புள்ளவர் என கூறப்படுகிறது. இவரது தந்தை நவாப் கான், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் 12 மணி நேரத்தில் இறந்த நபர் யார் என கண்டறியப்பட்டது. விபத்தில் எரிந்த கார் 10 பேரிடம் கைமாறியுள்ளது. அந்த 10 பேரையும் பிடித்து விசாரித்து யாருடைய கார்? என்பது கண்டறியப்பட்டது. இறந்தவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக உதவி கமிஷனர் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட அணி ஏற்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கூட்டு சதி 120பி, இரு பிரிவினர் இடையே விரோதத்தை ஏற்படுத்துதல் 153ஏ ஆகிய பிரிவுகளிலும், வெடிபொருட்களை பயன்படுத்தி சிலிண்டர் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதால் உபா சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள நபர்களின் வீடுகளை சோதனை செய்தும், அவர்களின் நடவடிக்கையை கண்காணித்தும் வருகிறோம். கார் வெடித்த சமயத்தில் கோயில் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பணியில் இருந்ததால் காரை மேற்கொண்டு செலுத்தாமல் வெடித்து இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கூட்டு சதியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறோம்.

மேலும், ஒரு சிலர் கேரளா சென்று வந்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் எதற்கு சென்றனர்?. எப்போது சென்றனர்? என்பது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.
மேலும், 2019-ல் ஒரு சில நபர்களை என்ஐஏ விசாரித்துள்ளது. ஜமேசா முபின் வீட்டில் இருந்து இரண்டு சிலிண்டர், 3 டிரம் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளனர். இதில், இருந்தவை குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். சிசிடிவியில் ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகிய 3 பேரும் முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்களை தெரிந்தே காரில் ஏற்ற உதவி செய்துள்ளனர். மேலும், ஒருவர் கார் கொடுத்து உதவியுள்ளார். ஒருவர் ஒருங்கிணைத்துள்ளார்.

இதில், பொட்டாசியம் நைட்ரேட், சார்க்கோல், சல்பர், அலுமினியம் பவுடர் என மொத்தம் 75 கிலோ அளவிலான வெடி மருந்திற்கான மூலப்பொருட்கள் இருந்தது. யூகங்கள் அடிப்படையில் பல தகவல்கள் வருகின்றன. பிடிபட்ட நபர்களிடம் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, திறமையாக செயல்பட்ட கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 5 இன்ஸ்பெக்டர்கள், 4 எஸ்ஐக்கள், 5 காவலர்கள், ஒரு புகைப்பட கலைஞர் என 15 பேரை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி, ரொக்கப்பரிசு வழங்கினார்.

* 4 இடங்களில் குண்டு வைக்க சதி?
கோவையில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. போலீசார், ஜமேசா முபின் வீட்டில் நடத்திய சோதனையின்போது அங்கிருந்து முக்கிய ஆவணம் ஒன்றை கண்டு எடுத்தனர். இதில், கோவை ரயில் நிலையம், கோவை கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் ஆபிஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஹிட் லிஸ்ட் மூலம் கோவையில் பெரிய சம்பவம் ஏற்படுத்த நினைத்துள்ளனர். இந்த சதி திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.

* வியாபாரி உடல் அடக்கம்
காரில் சிலிண்டர் வெடித்து பலியான ஜமேசா முபின் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்ய கோவையில் உள்ள ஜமாத்தார் முன்வரவில்லை. சமூக விரோத செயலுக்கு திட்டமிட்ட முபின் உடலை அடக்கம் செய்ய விரும்பவில்லை.  பயங்கரவாத செயலுக்கு துணைபோகின்ற நபர்களை ஆதரிக்கக்கூடாது என்ற அடிப்படையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுப்பதாக ஜமாத் நிர்வாகிகள் கூறினர். இந்த நிலையில் பூ மார்க்கெட் ஜமாத் சார்பில் மனிதாபிமான அடிப்படையில் ஜமேசா முபின் உடலை அடக்கம் செய்தனர்.

* கூடுதல் சோதனைச்சாவடிகள்
கோவையில் பதற்றம் நீடிப்பதால, கோட்டைமேடு, கரும்புக்கடை, செல்வபுரம்,  குனியமுத்தூர், குறிச்சி, ஆத்துப்பாலம் உள்ளிட்ட இடங்களில் அதிவிரைவு  படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய இடங்களில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவையில் 11 சோதனைச்சாவடிகள்  உள்ளன. கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

* மேலும் 2 பேர் சிக்கினர்
கைதான 5 பேரின் கூட்டாளிகளான மேலும் 2 பேர் தனிப்படை போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் ‘’உபா’’ சட்டத்தின்கீழ் கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Coimbatore ,Commissioner Balakrishnan , 5 people arrested in Coimbatore car cylinder explosion case under 'UPA' Act: more than 20 people questioned; Commissioner Balakrishnan sensational interview
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்