×

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

பெரம்பலூர்; பெரம்பலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால், கோரையாறு, மயிலூற்று, எட்டெருமைப்பாழி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக இருப்பது பச்சைமலை. பச்சை மலையின் தென்புறம் பெரம்பலூர் தாலுகா லாடபுரத்தில் மயிலூற்று அருவி, குரும்பலூர் மூலக்காடு அருகே மாடத்துவாரி அருவி, புதுநடுவலூர் அருகே அத்தி அருவி, நாட்டார் மங்கலம் அருகே முருங்கமரத்து அருவி, களரம்பட்டி அருவி, மேற்கில் வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந் துறை ஊராட்சி கோரையாறு அருகே கோரையாறு அருவி, மலையாளப்பட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவி, பூலாம்பாடி அருகே இரட்டைப்புறா அருவி என 8 அருவிகளும் குதூகலத்தை அதிகரிக்க செய்யும் குற்றாலங்களாக திகழ்கின்றன.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக்காரணமாக கடந்த சில தினங்களாக பச்சை மலைமேல் கனமழை பெய்து வருகிறது. இதனால் உற்பத்தியாகும் அருவி நீர் ஓடைகளில் உருண்டு புரண்டு ஓடிவந்து கல்லாற்றில் கலக்கிறது. 30 அடி உயரத்திலிருந்து மூலிகைச்சாறுகளைக் கலந்தபடி, மூர்க்கத் தனமாய் கொட்டுகின்ற கோரையாறு அருவிக்கும், எட்டெருமைபாழி அருவிக்கும் முதியவரும், பெண்களும் செல்வது முடியாத காரியமாக உள்ளது. இருந்தும் எட்டெருமைப்பாழி அருவி தண்ணீர்தான் சின்ன முட்லு அணைக்கட்டுத்திட்ட, கனவை நிறைவேற்றும் காரணியாகத் திகழ்கிறது. ஆண்டு தோறும் அரும்பாவூர் ஏரிகளை நிரப்புகிறது.

எளிதில் சென்றுவர ஏற்றதாக அமைந்த காரணத்தாலேயே லாடபுரம் மயிலூற்று அருவி, பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்தல அந்தஸ்தை பெற்றதோடு, பெரம்பலூர் மாவட்ட குற்றாலம் என பேர்சொல்லி அழைக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக ஆர்ப்பரித்து கொட்டும் மயிலூற்று அருவிக்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் சென்று வருவதால் சீசன் உச்சத்தை எட்டியுள்ளது. கோரையாறு அருவிக்கு வழக்கமாகச் செல்லும் வாலிபக்கூட்டம், மலையேற விரும்பும் நடுத்தர வயதுடையோர் தினமும் படையெடுத்து வருகின்றனர்.

Tags : Perambalur district , Incessant rains gushing water in Perambalur district: Tourists invade
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...