×

திருத்தணி- திருப்போரூர், சிறுவாபுரி உள்பட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி துவக்கம்

திருப்போரூர்: திருத்தணி, திருப்போரூர் மற்றும் சிறுவாபுரி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இன்று கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. இதை முன்னிட்டு இன்று காலை 5.30 மணியளவில் கோயிலில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கொடிமரத்தை சுற்றிவந்து கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. 4 மாடவீதிகளில் முருகப்பெருமான் மங்களகிரி பட்டறை வீதியுலா வந்தார்.

இன்று சூரிய கிரகணத்தையொட்டி பகல் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 8.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று இரவு 9 மணியளவில், கிளி வாகனத்தில் முருகர் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், ஸ்ரீபாதம் தாங்கிகள் சங்க தலைவர் குமரன், கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதுபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை 6 மணிக்கு கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பினர். இதன்பிறகு மூலவர் முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு இந்தாண்டுக்கான கந்தசஷ்டி விழா வருகின்ற 26ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு 26ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை மூலவர் முருகப் பெருமான்,  புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக் கசவம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

வரும் 30ம் தேதி மாலையில் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் 31ம் தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில், திருத்தணி கோயிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். கந்த சஷ்டி விழா நடைபெறும் நாட்களில் காலை, மாலை இரண்டு வேளைகளில் தேவாரபாராயணம் நடைபெறும். இதில் பக்தர்கள் குடும்பத்தினருடன் மலைக் கோயிலுக்கு சென்று வில்வ இலையால் லட்சார்ச்சனை செய்து வழிபடுவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் ஜெயப்பிரியா மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள்  நடத்தப்பட்டது. தினமும் முருகப்பெருமான் பல்லக்கு, தீர்த்தவாரி, கந்தபொடி வசந்தம் போன்ற அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். இரவில் பெருச்சாளி, ஆடு, மான் மற்றும் அன்னம், மயில், குதிரை வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இங்கு சூரசம்காரம் 30ம் தேதி நடக்கிறது. கந்த சஷ்டி ஏற்பாடுகளை  கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்பட பலர் செய்துள்ளனர்.

Tags : Kandashti ,Murugan ,Thiruthani ,Thirupporur ,Churuvapuri , Tiruthani- Tiruporur, Siruvapuri including Murugan Temples Kanthashasti initiation
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...