×

காங். தலைவராக கார்கே நாளை பதவியேற்பு: மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுக்கு அழைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நாளை மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு ெசய்வதற்காக தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் குறைந்த வாக்குகளே பெற்று தோற்றார். நாளை (அக். 26) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூன கார்கே, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தலைவர் பதவியை ஏற்கிறார். இந்த விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் என்று கூறப்படும் ஜி-23 தலைவர்கள் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மல்லிகார்ஜூன கார்கே முறைப்படி தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர், இடைக்கால தலைவராக செயல்பட்டு வந்த சோனியா காந்தி, அவரை தலைவருக்கான நாற்காலியில் அமர வைப்பார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், முன்னாள் முதல்வர்கள், மாநில அரசின் அமைச்சர்கள், செயல் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ததன் மூலம், அதிருப்தியில் இருந்த தலைவர்களும் நாளைய விழாவில் பங்கேற்பார்கள்.

கிட்டத்தட்ட அனைத்து அதிருப்தி தலைவர்களும், தேர்தலில் கார்கேவை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சி மிகவும் கடினமான கட்டத்தில் தலைவராக கார்கே பொறுப்பேற்கிறார். இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இரண்டுக்கும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கார்கே பொறுப்பேற்றவுடன், விரைவில் செயற்குழு கூட்டத்தை கூட்டுவார். அதன்பின், கட்சியில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்றனர்.

Tags : Kong ,Kharge , Kong. Kharge to be sworn in as president tomorrow: Call on senior leaders, executives
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...