கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த நோக்கங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2021-22 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்நிதிநிலை அறிக்கையில்  கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் மாபெரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கலைஞரின் அனைத்து  கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.  

*திட்டத்தின் நோக்கங்கள்

முதலமைச்சர் அவர்களின் பத்தாண்டு கால தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் நிகர சாகுபடிப் பரப்பினை 11.75 இலட்சம் எக்டேர் உயர்த்துவதற்கு, 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசுநிலங்களை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், வேளாண்மை-உழவர் நலத்துறையுடன், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த துறைகள் செயல்படுத்தும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து கிராமங்களிலும், ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியும், அதன் மூலம் தன்னிறைவும்  அடைவதே இத்திட்டத்தின்  முக்கிய நோக்கமாகும்.  

*கிராமங்கள் தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்  திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில்,  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டப்பணிகளையும் ஒருங்கே செயல்படுத்துவதற்கு வேளாண்மை-உழவர் நலத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  2021-22 ஆம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துக்களும், நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் 3,204 கிராம பஞ்சாயத்துக்களும் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

*கிராமங்களில் தரிசு நிலத் தொகுப்பு தேர்வு

தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர், முன்னோடி விவசாயிகள் மற்றும் இதரத்துறை அலுவலர்களை கலந்தாலோசித்து, பஞ்சாயத்தின் கீழ் உள்ள சிற்றூர் உட்பட அனைத்து பகுதிகளையும் கூர்ந்து ஆய்வு செய்து, தொகுப்பாக 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்களை சர்வே எண் வாரியாக கண்டறியப்படுகிறது. ஒரு கிராமப் பஞ்சாயத்தில் மிக அதிகமாக தரிசு நிலங்கள் இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் அமைக்கலாம். 10 ஏக்கருக்குக் குறைவாக தரிசுநிலங்களை தனியாக கணக்கெடுத்து, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

*தரிசுநிலத் தொகுப்பில் மேற்கொள்ளப்படும் பணிகள்:

* பாசன ஆதாரத்திற்காக புதிய ஆழ்துளைக் கிணறு: தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசுநிலத் தொகுப்பில், உள்ள விவசாயிகளுடன் கலந்தாலோசனை செய்து, தரிசுநிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பில் உள்ள விவசாயிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக உருவாக்கி, அக்குழு தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975 ன் கீழ் பதிவு செய்யப்படுகின்றது. பின்னர், புதிதாக பாசன வசதியினை உருவாக்குவதற்காக, வேளாண் பொறியியல் துறை மூலம் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் தரிசு நிலத் தொகுப்பிலோ அல்லது அருகில் உள்ள புறம்போக்கு நிலத்திலோ ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது.

பாசன நீரை இறைப்பதற்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் அல்லது மின் சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்புசெட்டுகளும் அமைத்து தரப்படுகிறது.  இதுவரை, 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் 980 தரிசுநிலத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டு, நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நீர்மட்டத்தின் அடிப்படையில் ஆழ்துளை அல்லது குழாய் அல்லது திறந்தவெளிக் கிணறுகள் 656 தரிசுநிலத் தொகுப்புகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, 428 இடங்களில் பணிகள் முடிவடைந்து, மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில், 61 இடங்களில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப்செட் நிறுவ பணி மேற்கொள்ளப்பட்டு, 12 இடங்களில் நிறைவடைந்துள்ளது. ஆழ்துளை/ குழாய் கிணறு அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்குண்டான செலவு முழுவதும் தமிழ்நாடு அரசினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு உருவாக்கப்படும் ஆழ்துளை / குழாய்க் கிணறுகளில் தொடர்ந்து நீர் இருப்பினை உறுதி செய்வதற்காக, ஊரக வளர்ச்சித்துறை மூலம் நீர் செறிவூட்டும் அமைப்புகள், தடுப்பணைகள் அல்லது, நீர் உறிஞ்சுக்குழி போன்ற கட்டமைப்புகளை அமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

* பல்லாண்டு பயிர் சாகுபடி: தொகுப்பு நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப்பயிர்களும், ஊடுபயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. தொகுப்பில் அமைக்கப்படும் பொதுவான ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சொட்டுநீர் பாசன முறை மூலம் பாசனம் மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

* இதரப் பணிகள்: திட்டக்கிராமங்களில் உள்ள ஏரி, குளம், வரத்து கால்வாய்களை தூர்வாருதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் மின் இணைப்புடன் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற பணிகளும்  100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டக் கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பயறு விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதைத் தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத்தொகை, பழக்கூடைகள் மற்றும் ட்ரம், பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்புகளும் மானியத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

* மாநில நிதியிலிருந்து ரூ.227.059 கோடி நிதி ஒப்பளிப்பு: முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,997 கிராமப் பஞ்சாயத்துகளிலும் மேற்காணும் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில நிதியிலிருந்து ரூ.227.059 கோடியினை அரசு ஒதுக்கி திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

* அனைத்து உழவர் நலத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துதல்: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை போன்ற துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் 80 சதவிகித இலக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டக் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறை மூலம் புதிய பட்டா வழங்குதல் அல்லது பட்டா மாறுதல், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்கள் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* பொறுப்பு அலுவலர் நியமனம்

கிராம அளவில் இத்திட்டப் பணிகளை இதரத் துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும்  ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த கிராமப் பஞ்சாயத்து பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.  

* இரண்டாம் கட்ட திட்டச் செயல்பாடு:  

2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டம் 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகள்  நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து, கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, கிராமங்களில் தன்னிறைவு எனும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: