×

சூரிய கிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் நடையடைப்பு: ஒரே நாளில் ரூ.6.31 கோடி காணிக்கை

திருமலை: சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடை அடைக்கப்பட்டது. சூரிய கிரகணம் இன்று மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை நிகழ உள்ளது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு வழக்கம்போல சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட நித்திய சேவைகள் நடைபெற்றது. பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 8 மணியளவில் செயல் அதிகாரி தர்மாரெட்டி, தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் மூலவர் சன்னதி முதல் மகா துவாரம் (ராஜகோபுரம் ) வரை உள்ள அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் கோயில் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி கிரகண தோஷ நிவர்த்தி பூஜை நடைபெறும். பின்னர் இரவு 7.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

ரூ.6.31 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் 80 ஆயிரத்து 565 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.6.31 கோடியை காணிக்கை செலுத்தினர். இது தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் ஒரே நாளில் செலுத்திய காணிக்கையாகும். இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஒரேநாளில் ரூ.5.73 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜூலை 4ம் தேதி ரூ.6.18 கோடியை காணிக்கை செலுத்தியிருந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 32 அறைகள் நிரம்பி டி.பி.சி. சந்திப்பு வரை பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 20 மணி நேரமும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதன்படி நேற்று 69,278 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 17,660 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.15 கோடியை காணிக்கை செலுத்தியுள்ளனர்.

* காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை
பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாக அமைந்துள்ளது காளஹஸ்தி கோயில். ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகவும் விளங்குகிறது. எனவே சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின்போது இக்கோயிலில் கிரகண தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கிரகணத்தின்போது காளஹஸ்தீஸ்வரரையும், ஞான பிரசுனாம்பிம்கை தாயாரையும் வழிபட்டால் ஜாதக தோஷங்களிலிருந்து விடுபடலாம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். மேலும் ராகு, கேது பரிகார பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.


Tags : Yeumalayan temple , 12-hour procession at Yeumalayan temple on the occasion of solar eclipse: Rs 6.31 crore in offerings in a single day
× RELATED புயல் மழை, கடும் குளிரால் கூட்டம்...