அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயில்வே மேலாளர் மனைவிக்கு பிரசவம்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில்நிலையத்தில் திருப்பத்தூர் ரயில்வே மேலாளர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வினிகுமார். இவர் திருப்பத்தூர் ரயில் நிலைய மேலாளராக உள்ளார். இவரது மனைவி சாந்தினி(29). நிறைமாத கர்ப்பிணியான இவரை சென்னை பெரம்பூர் மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அஸ்வினிகுமார், சாந்தி இருவரும் மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெரம்பூருக்கு புறப்பட்டு சென்றனர். அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நேற்று மதியம் வரும்போது சாந்தினிக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்க முடிவு செய்தனர். இதைக்கண்டு ரயில்வே பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் பரமேஸ்வரி, உடனே விரைந்து சென்று சாந்தினியை மீட்டு பெண் பயணிகள் அறையில் தங்க வைத்து டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் வருவதற்குள் சாந்தினிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அங்கிருந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள், தாய், சேயை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: