கோர்ட் அனுமதி வழங்கிய பிறகும் ஜாமீனில் வர முடியாமல் தவிக்கும் 1700 விசாரணை கைதிகள்-உதவ முன்வந்தது டாடா நிறுவனம்

புனே : மகாராஷ்டிராவில் விசாரணை கைதிகளாக உள்ள 1,700 பேர், ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் ஜாமீன் கிடைக்க வழியின்றி உள்ளனர். இவர்களை ஜாமீனில் விடுவிக்க டாடா சமூக அறிவியல் நிறுவனம் முன்வந்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆர்தர் ரோடு, பைகுல்லா பெண்கள் சிறை, மும்பை, தானே, கல்யாண், எரவாடா, அவுரங்காபாத், லாத்தூர், நாசிக், நாக்பூர் உள்ளிட்ட சிறைகளில் மொத்தம் 1,700 விசாரணை கைதிகள், திருட்டு, வழிப்பறி போன்ற சிறிய வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்களின் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றங்கள், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளன. இருப்பினும் பிணைத்தொகை, உத்தரவாதம் போன்றவை செலுத்தினால்தான் ஜாமீன் கிடைக்கும். ஆனால், இவர்களால் ஜாமீன் தொகையை செலுத்த இயலவில்லை. உதவியை நாடுவதற்கான வழியும் தெரியவில்லை. இதையடுத்து, கைதிகள் நலன் மற்றும் மருத்துவ உதவி துறையுடன் இணைந்து இவர்களின் கோர்ட் நிபந்தனைகளை பூர்த்தி செய்து ஜாமீன் பெற்றுத்தர டாடா சமூக அறிவியல் நிறுவனம் முன்வந்துள்ளது.

சிலரது ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு கோரிக்கை விடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜாமீன் தொகை ₹15,000 முதல் ₹20,000 வரை செலுத்த வேண்டியுள்ளதாகவும், டாடா சமூக அறிவியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Stories: