பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க குமரியில் 80 நிறுவனங்களில் புகார் குழு அமைப்பு-ஆய்வு நடத்த சமூக நலத்துறை முடிவு

நாகர்கோவில் : பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2013 ன் படி, 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் கண்டிப்பாக உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில், கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி மேற்பார்வையில்  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி ஜவுளி கடைகள், நகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், தனியார் மருத்துவமனைகள் என பல இடங்களில் பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.

தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா பணியிடங்களிலும் பெண்கள் அதிகளவில் உள்ளனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ள இந்த இடங்களில் எல்லாம் கண்டிப்பாக உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 80 நிறுவனங்களில் உள்ளக புகார் குழு  அமைக்கப்பட்டு, அது தொடர்பான பட்டியல் விபரங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

 கலெக்டர் உத்தரவின் பேரில் மற்ற நிறுவனங்களுக்கும் இது தொடர்பான அறிவிப்புகள் 2 கட்டம், 3 கட்டங்கள் என அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு அதன் விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக நலத்துறை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து குமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினியிடம் கேட்ட போது கூறியதாவது :ஒவ்வொரு அலுவலகத்திலும், வேலையிடத்திலும் அதன் பிரிவு பணியிடங்களிலும் 4 உறுப்பினர்கள் கொண்ட உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, கலெக்டர் உத்தரவின் பேரில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. குழு உறுப்பினர்கள் 4 பேரில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது  தொழிற்சாலை, அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த நிலையில் உள்ள பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். இவரே குழுவின் தலைவர் ஆவார்.

மீதி 3 பேரில், 2 பேர் சம்பந்தப்பட்ட பணியிடத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். 4ம் நம்பர், சமூக நல பணியாளர் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்ைத சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண்கள் தொடர்பு உடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியாற்றும் பெண்கள், பணியிடத்தில் உள்ள பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக உள்ளக புகார் குழுவிடம் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பணியிடத்தில் ஒரு புகார் பெட்டி இருக்கும். அந்த புகார் பெட்டிக்கு 2 சாவிகள் இருக்கும். ஒரு சாவி சம்பந்தப்பட்ட தலைமை குழு உறுப்பினரிடமும், மற்றொரு சாவி என்.ஜி.ஓ. அமைப்பை சார்ந்த உறுப்பினரிடமும் இருக்க வேண்டும்.

இரு பூட்டுகள் கொண்டதாக இந்த பெட்டி இருக்கும். உள்ளே புகார் மனு இருக்கிறது என்பது வெளியே தெரியும் வகையில் கண்ணாடி அமைப்பு கொண்டதாக இருக்கும். இதில் உள்ள புகார் மனுக்களை விசாரித்து பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணைக்கு இந்த குழு துணை புரிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும் கண்டிப்பாக உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிகளில் தற்போது விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் புகார் பெட்டி

உள்ளக புகார் குழுவுக்கான புகார் பெட்டி, சம்பந்தப்பட்ட பணியிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடத்தில் இருக்க வேண்டும். கேமராக்கள் இருக்கும் இடத்தில் இருந்தால் யார் புகார் மனுக்களை உள்ளே செலுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும். எனவே கழிவறை கதவுகள் உள்ளிட்ட கேமராக்கள் இல்லாத இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம்

உள்ளக புகார் குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களில் பாதி பேர் பெண்களாக தான் இருக்க வேண்டும். இக்குழு  உறுப்பினர்களின் அலுவல் காலம் 3 ஆண்டுகள் ஆகும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மாற்றத்துக்குரியது. சம்பந்தப்பட்ட உறுப்பினரின் செயல்பாட்டில் சந்தேகம்  இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அவர் மாற்றப்படலாம்.

Related Stories: