தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம்

பெங்களூரு : மழை வேண்டி கழுதை, தவளை, ஓநாய் உள்ளிட்டவைகளுக்கு திருமணம் செய்வதை கேள்விப் பட்டுள்ளோம். ஆனால் தீபாவளி பண்டிகைக்காக ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு நடந்துள்ளது.கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், பீதர் தாலுகாவில் உள்ள ஹவுராத் கிராமத்தில் கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் தீபாவளி பண்டிகை நாளில் ஆண், பெண் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் வைபவம் தொடங்கப்பட்டது.  கடந்த 14ம் நூற்றாண்டில் மகாத்மா பொம்மகொண்டேஷ்வரசுவாமி தீபாவளி நாளில் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை தொடங்கியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வழக்கத்தை கிராம மக்கள் இன்று வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இவ்வாண்டு தீபாவளி நாளான நேற்று கிராமத்தில் ஆட்டு குட்டிகளுக்கு திருமணம் நடந்தது. கிராமத்தை சேர்ந்த சிறுவர் முதல் முதியோர் வரை காலையில் எண்ணை வைத்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து கிராமத்தில் உள்ள தேவதை கோயில் திடலில் கூடினர். முதலில் கிராம தேவதைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ஆண், பெண் ஆட்டுக் குட்டிகளை குளிப்பாட்டி புத்தாடை அணிந்து, மாலைகள் சூடி நெற்றியில் குங்குமம், திருநீரிட்டு அழைத்து வந்தனர். புரோகிதர்கள் ஆண் குட்டியின் வலது காலையும், பெண் குட்டியின் இடது காலையும் இணைத்து நூலால் கட்டினர். பின்னர் வேத-மந்திரங்கள் ஓதிய பின் நாதசுர ஓசையில் புரோகிதர் தாலி கட்டினார். இத்திருமணத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டதால் கிராமமே கோயில் வளாகத்தில் கூடியது.

ஆட்டுக் குட்டிகள் திருமணத்தை முன்னிட்டு ஹவுராத் கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் மாவிலை தோரணங்கள் கட்டியும், விண்ண மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. ஆட்டுக் குட்டிகள் திருமணத்தை காண ஹவுராத் கிராமத்தினர் மட்டுமில்லாமல் அக்கம்-பக்கம் கிராமத்தினரும் நூற்றுக்கணக்கில் கூடினர். திருமணத்தை முன்னிட்டு அறுசுவை விருந்தோம்பல் நடந்தது.

Related Stories: