கடப்பா தர்காவில் வழிபாடு முதல்வர் ஜெகன்மோகன் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை-நடிகர் விஷால் பேட்டி

திருமலை : கடப்பா தர்காவில் வழிபாடு நடத்தியபோது முதல்வர் ஜெகன்மோகன் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் அரசியல் வாழ்க்கையை மையமாக கொண்டு பயோபிக் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் அரசியல் பிரசாரத்தின் அடிப்படையில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் யாத்ரா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ராஜசேகரரெட்டி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது ஜெகன்மோகன் வாழ்க்கை வரலாறு வருகிற 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, யாத்ரா படத்தை தயாரித்த மஹி ராகவபுடி தற்போது முதல்வர் ஜெகனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கான கதையுடன் தயாராக உள்ளார். இதற்கு நாயகனாக நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு கடப்பா எம்பியாக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய முதல்வர் ஜெகன்மோகன் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு அவர் சந்தித்த சூழ்நிலைகளை இந்த வாழ்க்கை வரலாற்றில் படமாக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆதரவு யாத்திரை- காங்கிரசில் இருந்து வெளியில் வந்த பிறகு சிபிஐ மூலம் வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டது போல் சித்தரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஜெகன்மோகன் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் அன்று நடந்து கொண்ட விதம் ஆந்திர நலனுக்காக எடுக்கப்பட்ட போராட்டம், இனி சட்டசபையில் அல்ல நேரடியாக பொதுவெளியில் இறங்க வேண்டும் என்ற முடிவோடு தொடங்கிய நடைபயணம் தான் இந்த வாழ்க்கை வரலாற்றின் முக்கிய கருவாக மாற்றப்பட்டுள்ளது.

3648 கி.மீ தூரம் ஜெகன்மோகன் மாநிலம் முழுவதும் பாத யாத்திரை நடந்து சாதனை படைத்து, நவரத்னா திட்டம் தேர்தல் வாக்குறுதிதாக அறிவித்து மாநில வரலாற்றில் முதல் முறையாக 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி முதல்வராக பதவியேற்கும் வரை முழுக்க வெள்ளித்திரையில் காட்சியளிக்கும் வகையில் பட தயார் செய்யப்பட உள்ளது.

முதல்வர் ஜெகன்மோகனை சில நடிகர்கள் விமர்சிப்பதை எதிர்கொள்ள ஜெகன் ரீல் ஹீரோ அல்ல, உண்மையான ஹீரோ எனும் வகையில் படத்திற்கு 2 பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றில் ரியல் ஹீரோ, என்றும் ஜகன் அனே நேனு (ஜெகன் எனும் நான் ) 2வது பெயராக பரிசீலிக்கப்படுள்ளது. இந்த முழு திட்டத்தையும் முதல்வர் ஜெகன்மோகனிடம் விளக்கி அவரது ஒப்புதலை பெற திரைப்பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முதல்வர் ஜெகன் ஒப்புக்கொள்வாரா? அல்லது நிராகரிப்பாரா? என்பதை பொறுத்து இப்படம் வெள்ளித்திரையில் வெளியாகுமா என்பது தெரியவரும்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நடிகர் விஷால் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, நிருபர்களிடம் கூறியதாவது: கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு பல நாட்களாக வரவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் வர முடியவில்லை. தற்பொழுது முதல் முறையாக வந்துள்ளேன். நான் நன்றாக இருக்க வேண்டும் வேண்டி கொள்ள மாட்டேன். பிரார்த்தனைகள் வெளியே கூறக்கூடாது என்பார்கள். கடப்பாவிற்கு பலமுறை படப்பிடிப்பிற்காக நான் வந்துள்ளேன்.

அவ்வாறு வரும் போதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அந்த எனர்ஜி தற்பொழுது கடப்பா தர்காவில் தரிசனம் செய்த போது எனக்கு முழு அளவில் கிடைத்ததாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் அல்லாஹ்வையும், வெங்கடேஸ்வர சுவாமியும், இயேசுவையும் வழிபடுவேன் எனக்கு மதம் என்ற பிரிவினை கிடையாது. அனைத்து மத கடவுளையும் மதிக்க கூடியவன். முதல்வர் ஜெகன்மோகன் பாதயாத்திரையை மையமாக கொண்டு திரைப்படம் வருவது நல்ல தகவல்.

அவர் பாதையாத்திரையின் போது பலர் அவரை நேரில் பார்த்திருப்பார்கள். ஆனால், நேரில் பார்க்காதவர்கள் அவர் பட்ட சிரமங்கள் அனைத்தையும் இந்த திரைப்படத்தின் மூலமாக பொதுமக்கள் பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நான் முதல்வர் ஜெகன் கேரக்டரில் நடிக்கவில்லை. டிசம்பர் மாதத்தில் லட்டி திரைப்படம் வெளியாக உள்ளது. தீபாவளி பண்டிகைக்கான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். யாராக இருந்தாலும் ஒரு 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். சேவை செய்பவர்களே அரசியல் நோக்கம். ஆகவே நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: