×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது: 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 7.30 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலையில் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு. பின்னர் 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

இன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு பட்டு சாத்தி கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் வழக்கம் போல நடக்கிறது. 2-ம் திருவிழா முதல் 5-ம் திருவிழா வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் கிரி வீதியில் வலம் வந்து கோவிலை சேர்கிறார். 6-ம் திருநாளான 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

பின்னர் யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாள்களும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹாரமான பின்பு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். 7-ம் திருநாளான 31-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 5 மணிக்கு தெய்வானை அம்மாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார். பின்னர் 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று விழாவுக்கு புறப்படுகிறார்.

பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 2, 3, 4 ஆகிய தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது. 5-ந் தேதி (சனிக்கிழமை) 12-ம் திருநாளன்று மாலை மஞ்சள் நீராட்டு, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பின்னர் கோவிலை சேர்கின்றனர். விழா நாட்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு போன்றவை கோவில் கலையரங்கில் நடக்கிறது.

Tags : Kandasashti festival ,Thiruchendur Subramanian Swami Temple , Gandashashti festival begins with bang at Tiruchendur Subramanya Swamy temple: Devotees allowed after 2 years
× RELATED கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்