அரசின் உத்தரவின் பேரில் நடவடிக்கை பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம்-மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி

வேலூர் : தமிழக அரசின் உத்தரவின்பேரில், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள், தட்டுகள் என பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்துக்கும், விற்பனைக்கும், உற்பத்திக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் துணி பைகளை உபயோகிப்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனாலும் ஓட்டல்கள், மளிகை கடைகள், அங்காடிகள், பேக்கரிகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் என எங்கும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக தங்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும் அவ்வபோது ரெய்டுகள் நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டையோ, அதன் விற்பனையையோ, உற்பத்தியையோ தடுக்க முடியவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த மூன்று நாட்களாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளில் மாசு கட்டுப்பாடு வாரியம் ஈடுபட்டு வருகிறது.

நேற்று வேலூர் மாநகராட்சி 2வது மண்டலமான சத்துவாச்சாரி பகுதிகளை தொடர்ந்து, நேதாஜி மார்க்கெட், மெயின் பஜார், லாங்கு பஜார், ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் சவுந்தர்யா தலைமையில், மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பூக்கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில், பேக்கரிகளில் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். இதில் 50 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் கைப்பற்றப்பட்டு, வியாபாரிகளுக்கு ₹8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் பேரணாம்பட்டு, குடியாத்தம் நகராட்சி பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நடவடிக்கையை அந்தந்த நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டது.இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் சவுந்தர்யாவிடம் கேட்டபோது, ‘இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அந்தந்த மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை’ என்றார்.

Related Stories: