ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து பாஜவுக்கு தாவும் 22 எம்எல்ஏக்கள்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியின் 22 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவ உள்ளதாக, உத்தவ் தாக்கரே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜவுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டது. முதல்வர் பதவியை பாஜ விட்டுத்தர தயாராக இல்லாததால், கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். பின்னர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டது. சிவசேனா தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சி அமைத்து, உத்தவ் தாக்கரே முதல்வரானார். இதில் இருந்தே, பாஜவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மெட்ரோ பணிமனை உட்பட பல்வேறு விஷயங்களில், ஒன்றிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை உத்தவ் எடுத்தார்.

இந்த நிலையில்தான். அப்போதைய மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அமைச்சர்கள், முக்கிய தலைவர்களிடம் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து சிபிஐ விசாரணையும் நடந்தது. ஒன்றிய அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாக உத்தவ் உட்பட மகா விகாஸ் அகாடி தலைவர்கள் குற்றம் சாட்டினர். மோதல் தொடர்ந்து வந்த நிலையில், மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தல் நடந்த கையோடு, அப்போதைய அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மாயமானார். இதனால், மகாவிகாஸ் அகாடி கூட்டணி பெரும்பான்மை இழந்து கவிழ்ந்தது. அடுத்த நாளே அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜ ஆதரவுடன் ஷிண்டே ஆட்சி அமைத்து முதல்வரானார். பாஜ தலைவர் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வரானார். சிவசேனா கட்சி, ஏக்நாத் ஷிண்டே அணி என்றும் உத்தவ் தாக்கரே அணி என்றும் இரண்டாக பிளவுபட்டு விட்டது.

இதனிடையே, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஷிண்டே அணியை ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரி அமைப்பு விடுத்ததை எதிர்த்தும் உத்தவ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதுதவிர, தங்களுக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால் சிவசேனா சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஷிண்டே தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்தனர். இதனிடையே, அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவசேனா சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. உத்தவ் அணிக்கு சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி பெயர், தீப்பந்தம் சின்னவும், ஷிண்டே அணிக்கு பாலாசாகேப்பின் சிவசேனா கட்சி பெயர், வாள் கேடயம் சின்னமும் ஒதுக்கீடு செய்தது. இதற்கிடையே, அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா உத்தவ் அணி வேட்பாளர் ருதுஜா லட்கே மாநகராட்சி பதவியில் இருந்து விலக அளித்த கடிதத்தை ஏற்காத நிலையில், கோர்ட்டில் சட்டப்போராட்டத்துக்கு ராஜினாமாவை மாநகராட்சி ஏற்பட்டது.

இதையடுத்து, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வேண்டுகோளை ஏற்று பாஜ வேட்பாளர் முர்ஜி படேல் தனது மனுவை வாபஸ் பெற்றார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், 2 நாள் முன்பு பேசிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, உத்தவ் அணியின் 4 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேசி வருவதாகவும், ஷிண்டே அணியில் சேர அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில், 22 ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவ உள்ளதாக உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். இது குறித்து அவரது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தெரிவித்திருப்பதாவது: கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் தாங்கள் அமோக வெற்றி பெற்றிருப்பதாக ஷிண்டே அணியினர் கூறிவருகிறார்கள்.

அது உண்மையல்ல. ஷிண்டே அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் பாரதிய ஜனதாவில் சேரவுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேயை பாரதிய ஜனதா தற்காலிகமாகத்தான் முதல் அமைச்சர் ஆக்கியது. ஏக்நாத் ஷிண்டே தனக்கும் மகாராஷ்டிராவுக்கும் பெருமளவில் பாதகங்களை செய்துள்ளார். எனவே  மகாராஷ்டிரா மக்கள் ஒரு போதும் ஏக்நாத் ஷிண்டேயை மன்னிக்கமாட்டார்கள். பாரதிய ஜனதா தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேயை தனக்கு சாதகமாக பயன்படுத்தும். முக்கிய முடிவுகளை பாரதிய ஜனதாதான் எடுக்கிறது. ஷிண்டேவுக்கும் அதற்கும் தொடர்பில்லை. அதிகாரிகளை இடமாற்றம் செய்வது அவர்களை புதிய பதவிகளில் நியமிப்பது போன்ற வேலைகளை மட்டும் ஷிண்டே செய்கிறார். அவரை ஆதரிக்கும் 39 எம்.எல்.ஏ.க்களும் இதைத்தான் விரும்புகிறார்கள். இவ்வாறு சாம்னா கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: