×

கூடுதல் பணவசூலை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளில் யூபிஐ வசதி ஏற்படுத்த வேண்டும்: மதுபிரியர்கள் வலியுறுத்தல்

நாகர்கோவில்:  டாஸ்மாக் கடைகளில்  கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க யூபிஐ மூலம்  பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில்  டாஸ்மாக் மூலம் அரசே நேரடியாக மது விற்பனை செய்து வருகிறது. தொடக்க  காலத்தில் ஒரு சில மது பாட்டில்களின் விலை போக மீதி ரூ. 2 அல்லது ரூ. 3  சில்லறையாக வழங்க வேண்டும் என்பதால், சில்லறை இன்றி ரவுண்டாக 5 அல்லது 10  என கணக்கிட்டு மீதி பணம் தந்தனர். பல கடைகளில் சில்லறை இருந்தாலும், விலையை  ரவுண்டாக வாங்குவதாக வந்த புகார்களை அடுத்து, அரசே மது பாட்டில்களின்  விலையை உயர்த்தி ரவுண்டாக மாற்றியது.

ஆனால், இதன் பின்னர்  மதுபாட்டில்களின் விலையை குவாட்டருக்கு ரூ.5ம், ஆப் பாட்டில் என்றால்  ரூ.10ம், முழு பாட்டிலுக்கு ரூ.20ம் என கூடுதலாக கட்டாய வசூல் செய்ய தொடங்கி  விட்டனர். இதுபோல், பீர் பாட்டில் கூலிங்காக வழங்க மின்கட்டணத்திற்காக ரூ.5  வாங்கியவர்கள் இதனையும், ரூ.10 ஆக உயர்த்தி விட்டனர். மது  பாட்டில்கள் விலை உயரும் போது, அதிலிருந்து எக்ஸ்ட்ராக பணம் வாங்கி  வருகின்றனர். இதனை தடுக்க ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என அரசு  உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த கடையிலும் ரசீது என்பது  வழங்கப்படுவதில்லை.

சில கடைகளில் கூடுதல் கட்டணம் ஏன் தர வேண்டும் என   வாக்குவாதம் செய்தால், மது பாட்டில் கிடையாது எங்கு வேண்டுமானாலும் சென்று  புகார் செய் என ஒருமையில் மிரட்டல் விடுக்கின்றனர். தற்போது,  மண்டல மேலாளர் வரை கடைகளின் விற்பனையை பொறுத்து, மாதம் தோறும் கப்பம்  செலுத்துவதால், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட யாருக்கு புகார் தெரிவித்தாலும்,  எவ்வித நடவடிக்கையும் கிடையாது. இந்நிலையில், ஏடிஎம் கார்டுகள்  பயன்படுத்தி மது விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி,  கார்டுகளை ஸ்வைப் செய்து சிலர் மது வாங்கி வந்தனர். இந்நிலையில், கார்டு  ஸ்வைப் இயந்திரங்களை டாஸ்மாக் நிர்வாகம் திரும்ப பெற்றுக் கொண்டது. இதனால்,  பணம் ரொக்கமாக கொடுத்தே மது வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கூடுதல்  கட்டண வசூலை தடுக்க போன் பே, பேடிஎம்  மற்றும் கூகுள்பே போன்ற க்யூஆர்  ஸ்கேன் செய்து யூபிஐ  (Unified Payments Interface) மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தினால், கூடுதல்  பணம் வாங்கினாலும், அதுபற்றி ஆதாரத்துடன் புகார் செய்ய முடியும். மேலும்,  நேரடியாக டாஸமாக் கணக்கில் பணம் செலுத்துவதால், முறைகேடு குறைய வாய்ப்பு  கிடைக்கும். டாஸ்மாக் கடைகளில் பணம் கொள்ளை போகும் வாய்ப்புகளும் குறையும்  என மதுபிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : UPI ,Tasmac , Tasmac shops should have UPI facility to curb extra cash collection: Alcoholics insist
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...