திருமலை: ஆந்திராவில் நேற்று காலை பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் தீபாவளி பண்டிகையொட்டி 20க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒரு கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. மேலும் அருகில் அடுத்தடுத்து இருந்த 15, 16, 17 எண்கள் கொண்ட கடைகளுக்கும் தீ பரவியது. இதில் 4 கடைகளிலும் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தால் 15ம் எண் கடையில் வேலை பார்த்த பிரம்மா, காசி ஆகிய 2 ஊழியர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும், 4 கடைகளிலும் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சேதமானது. அப்போது பட்டாசு வாங்க வந்தவர்கள் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.