தடகள வீரர்களை உருவாக்கும் கோவிந்தவாடி அகரம் அரசு பள்ளி; தடைகளை தகர்த்து வெற்றிகளை குவிக்கும் மாணவர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ளது கோவிந்தவாடி அகரம் ஊராட்சி. கோவிந்தவாடி என்றாலே இங்குள்ள குரு பகவான் கோயில் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள, மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். உள்ளூர் மாணவர்களுக்கு மட்டுமல்ல மாவட்ட மாணவர்களுக்கும் கோவிந்தவாடி அகரம் மேல்நிலை பள்ளி மாணவர்களை பார்த்தாலே கிலி தான். காரணம், இங்குள்ள மேல்நிலைப்பள்ளி படிப்புக்கு மட்டுமல்ல விளையாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறது. இவர்கள் விளையாட்டில் மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் ஓட்டப்பந்தயத்தில், வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல ஓடிச் சென்று வெற்றிகளை குவித்து, பள்ளிக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவ, மாணவிகள் கொரோனா காலகட்டங்களில் எந்தவித பணியும் இன்றி பள்ளி செல்லாமல் தொய்வடைந்து இருந்தனர். இதனை கண்ட நாங்கள் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி கிராமப்புற இளைஞர்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஓட்டப்பந்தயம், கபடி உள்ளிட்ட சிறிய அளவிலான பயிற்சிகளை மாணவர்களுக்கு கொடுத்தோம். நாளடைவில் இந்தப் பயிற்சிக்கு  50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமப்புற மாணவ, மாணவிகள் வர ஆரம்பித்தனர். எனவே, அனைவரும் பயன்பெறும் வகையில் நாள்தோறும் காலையும் மாலையும் தொடர் பயிற்சி அளித்து வருகிறோம்.

இதன் விளைவாக, இந்தப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் அனைத்து தடகளப் போட்டிகளிலும் பங்கு பெற்று பதக்கம் பெறாமல் வீடு திரும்புவதில்லை. விளையாட்டு மட்டுமே வாழ்க்கை இல்லை. படிப்பும் முக்கியம் என்பதால் நகரத்து மாணவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு பத்து, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் இறுதியாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். இதற்காக மாலை நேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்பு எடுக்கிறோம். இதில் கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயற்சி அளிக்கிறோம் என்றனர். மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வரும் தன்னார்வ பயிற்சியாளர்கள் சதிஷ், அசோக் ஆகியோர் கூறியிருப்பதாவது: 1960ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் இது நாள் வரை விளையாட்டு துறையில் எந்தவித பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றதில்லை.

இந்நிலையில், இந்த 2022ம் ஆண்டில் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களில் இப்பள்ளி மாணவ மாணவிகளின் கால் படாத இடங்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக இதுவரை தமிழக அளவில் 18 பதக்கங்களும் பள்ளி அளவிலான ஓட்ட பந்தய விளையாட்டுகளில் 26 பதக்கங்களும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோவிந்தவாடி அகரம் அரசுப் பள்ளியை சேர்ந்த வினிதா என்ற மாணவி, 2 ஆயிரம் மீட்டர் ஜூனியர் ஓட்டப் பந்தய பிரிவில் 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Related Stories: